ப்ளஸ் 2 பெயில் என்கிற தாழ்வு மனப்பான்மை.கணவனின் சம்பாத்தியத்தில் கவுரவமான வாழ்க்கை,ஒரே மகன் .மகிழ்ச்சியான குடும்பம் என்று காலம் ஓடினாலும் தனக்கென ஒரு ஆசை வருமல்லவா…அது ஜோதிகாவுக்கு வந்து நம்மை கிறங்கடித்து கண் கலங்கவைக்கிறது. எஃப் எம் ரேடியோ வி ஜே .மதுவாக மாறிய பின்னர் நாம் இருப்பது தியேட்டர் என்பதை மறந்து விடுகிறோம். (அது சரி ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பம் அவ்வளவு பெரிய அபார்ட்மெண்ட்ஸில் இருக்க முடியுமா?)
தொடக்கத்திலேயே சொல்லிவிடுகிறேன் குடும்பத்துடன் பார்க்கவேண்டிய படம் ‘காற்றின் மொழி ‘
இளமை,அழகு, ஆற்றல் அத்தனையும் அமைந்த ஜோதிகா குகையை விட்டு கிளம்பிய சிங்கம் மாதிரி நடிப்பில் வேட்டையாடி இருக்கிறார்…முகபாவனைகளை இவர் அளவுக்கு மாற்றக்கூடிய நடிகைகள் தற்போது யாருமிருப்பதாக தெரியவில்லை.சம பைஃட் கொடுக்கக்கூடிய நயன் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?
நோ சான்ஸ்.
ஸ்பூன் அண்ட் லெமன் ரேஸ் வின்னர் ஜோதிகாதான் ! ( வம்பு இழுத்திருக்கிறோமோ?) விஜயலட்சுமி கேரக்டரை வேறு யார் செய்திருந்தாலும் ஜோ அளவுக்கு செய்திருக்க முடியாது. வித்யாபாலன் இந்தியில் அமர்க்களம் என்றால் இவர் தமிழில் அதகளம்.
தழுவல் கதைதான்.ஆனாலும் தமிழுக்கு தகுந்தமாதிரி கதையைக் கொண்டு போய் இருக்கிறார் இயக்குநர் ராதா மோகன்.
முழுமையாக ஆதிக்கம் செலுத்துகிறவர் ஜோ தான், அந்த ஆதிக்கத்துக்கும் மேன்மை சேர்க்கிறார்கள் விதார்த், லட்சுமி மஞ்சு, எம்.எஸ் பாஸ்கர், மயில்சாமி, குமரவேல்,வசனம் எழுதிய பொன்.பார்த்திபன்.( ‘டர்ட்டி பொண்டாட்டி பாடல் வரிகளும் அந்த பாடலை படமாக்கிய ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமியும் விளையாடி இருக்கிறார்கள். படத்தைப் பார்த்திட்டு சொல்லுங்க.)
குறிப்பாக எம்.எஸ்.பாஸ்கரின் குணசித்திர நடிப்பு அசத்தல்.மயில்சாமியின் மாடிப்படி காமடியை மறக்க முடியாது. ‘கண்ட இடத்தில் முட்டி போட்டா இப்படித்தான்’ என்கிற வசனத்துக்கு இந்த மயில்தான் எடுத்துக்காட்டு,
இரட்டை அர்த்த வசனம் மனோபாலாவின் சக்தி.
அம்மாவின் பயணத்தை தனது பயணமாக ஆர்ஜே அஞ்சலியிடம் அள்ளி விடுகிற காட்சியில் இருந்தே ஜோ வின் பயணம் தொடங்கி விடுகிறது. “செக்ஸின்னா என்ன தெரியுமா “என்கிறபோது ஜோ காட்டும் பாவனை, இரட்டை சகோதரிகளின் வக்கனைப் பேச்சு ,அப்பாவின் குற்றச்சாட்டு, கணவனின் கலக்கம், மகனின் செல்போன் திருட்டு அத்தனையிலும் ஜோ கொடி பறக்கிறது.
லட்சுமி மஞ்சுவின் கட்டைக்குரல் அதுவும் ஒரு ரசனைதான்.!
சிறிது நேரமே வந்தாலும் சிம்புவின் மனவலி அசலை பிரதிபலிக்கிறது.மனிதன் ரொம்பவே காதலில் காயப்பட்டிருப்பார் போலிருக்கிறது.
ரகுமான் குடும்பத்து வரவு ‘போ உறவே’ பாடலில் தெரிகிறது.வாழ்த்துகள் ஹாசிப்.
உமாபத்மநாபன், இரட்டை சகோதரிகள் அறிவுரைகள்,என சில காட்சிகளை குறைத்திருக்கலாம்.
மார்க். 3.5/ 5