தமிழன் மீது காவி துப்பும் எச்சில் ! திருமுருகன்காந்தி கோபம்.

நீட் தேர்வால் பலியான அனிதாவின் மரணத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அவரின் துயரக்கதையை மையமாக வைத்து ‘அநீதி’ எனும் குறும்படம் உருவாகி இருக்கிறது. இதில் ’ராஜா ராணி’ பாண்டியன், பிரதீப் கே.விஜயன், லல்லு, கேப்ரிலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே.சி.பால சாரங்கன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஸ்வா, ஹரி பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அநீதிக்கு தீர்வு மரணம் அல்ல என்பதை வலியுறுத்தும் படமாக அமைந்து இருக்கிறது இப்படம். ஸ்ரீராம் காஞ்சனா தங்கராஜ் என்ற இளைஞர் இயக்கி இருக்கும் இப்படத்தின் திரையிடல் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பாலாஜி சக்திவேல், நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், கதிர், சமூகப்போராளி திருமுருகன் காந்தி, இயக்குநர் இளன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
ஜி.வி.பிரகாஷ் பேசும்போது, “நீட் என்பதை யார் கொண்டு வந்தார்களோ அவர்களே அதை வைத்துக்கொள்ளட்டும் தமிழ்நாட்டுக்கு அது தேவையில்லை. நான் அனிதாவின் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். அதனால் அந்த வலி எனக்கு அதிகமாக இருக்கிறது. அந்த கலக்கம் இன்னும் என்னை விட்டு போகவில்லை. இந்தப்படத்தின் கதையோட்டம் எப்படி இருந்தாலும் படத்தின் முடிவு மிக முக்கியமானது’’ என்றார்.
திருமுருகன் காந்தி பேசுகையில், “இந்தப்படத்தில் வந்த ஒருகாட்சி, “காவி உடை அணிந்த ஒருவர் பஸ்ஸில் போகும்போது எச்சில் துப்புகிறார். அந்த எச்சில் ‘தமிழன்டா’ என்ற பனியன் போட்டிருந்த பையன் மீது விழுகிறது. இந்த ஒரு காட்சியே உண்மையை உணர்த்தி விட்டது.
Related Posts
ஒரு தேசத்தில் அறம் இல்லாவிட்டால் அந்தத் தேசத்தின் மொழியில் உயிர் இருக்காது என்று ஒரு இலங்கை கவிஞர் சொன்னார். படைப்புலகம் இதுபோன்ற கொலைகளை பதிவு செய்யும் போதுதான் அது பரவலாகப் போய்ச்சேரும்.
எனக்கு ஒரு வருத்தம் உண்டு. 9 ஆண்டுகள் கடந்துவிட்டது ஈழத்தில் படுகொலைகள் நடந்து.
இதுவரை அதைப்பற்றி ஒரு படைப்புகூட வரவில்லை என்ற வருத்தம் உண்டு. இந்தக் குறும்படத்தை கொங்கு மண்டலத்தில் எடுத்திருக்கிறார்கள். கொங்கு மண்டலத்தில் ஒரு அம்பேத்கர் சிலையை கூட பார்க்க முடியவில்லை. இந்திய அரசியல் அமைப்புச் சட்டமே மனுதர்மத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்கிறது. பெரியாரையும் அம்பேத்கரையும் கொஞ்சம் படித்தாலே நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். ஊரும் சேரியும் இருக்கும் வரை இந்தச்சமூகம் முன்னேறும் தகுதியற்றது” என்றார்.
இயக்குனர் ஸ்ரீராம் காஞ்சனா தங்கராஜ் பேசும்போது, ‘நீட் தேர்வு பற்றி திருமுருகன் காந்தி பேசும் வீடியோக்களை பார்த்துதான், இந்த படம் இயக்கும் எண்ணம் ஏற்பட்டது. இந்த படம் பற்றி திருமுருகன் காந்தியிடம் பேச சென்றபோதுதான், அவர் கைதானார். அவர் எனக்கு மிகப்பெரிய இன்ஷ்பிரேஷன். எனக்கு உறுதுணையாக இருக்கும் நான்கு பேருக்கு மிகவும் நன்றி’ என்றார்.