புதிய படங்களை திரையிட மாட்டோம்! தீயசக்திகளிடமிருந்து தமிழ்த்திரையுலகை மீட்டுத் தாருங்கள்! ஜெயலலிதா தலையிட தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை !!
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்து ஒரு அறிக்கையை வெளியிட்டனர். அதில், கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கோயம்பேடு ரோகினி தியேட்டர் உரிமையாளர் பன்னீர் செல்வம், தன்னுடன் ஒரு தவறான கூட்டத்தை வைத்துக் கொண்டு, தொடர்ந்து தமிழ் சினிமாவை அழிக்கும் தீய சக்தியாக வேலை செய்து வருகிறார்.இதன் தொடர்ச்சியாக .’பாயும் புலி’திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார்.தங்களுக்கு ஒரு பெருந்தொகை தரவேண்டும் என்றும் அந்த தயாரிப்பாளரை மிரட்டி வருகிறார். இதனை கண்டிக்கும் வகையிலும், இதற்கு தீர்வு காணும் விதத்திலும் வருகிற 4-9-2015 முதல் புதிய நேரடித் தமிழ் படங்கள் மற்றும் மாற்று மொழிப் படங்களும் வெளியிடுவதில்லைஎன்றும், மேலும் 11-9-2015 முதல் அனைத்து திரைப்படங்களும் தமிழகம் முழுவதும் திரையிடுவதில்லை என்றும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.மேலும் இந்த பிரச்சனையில், தமிழக அரசு தலையிட்டு இதுபோன்ற தீயசக்திகளிடமிருந்து தமிழ் திரையுலகை மீட்டுத்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது
இதன் காரணமாக வருகிற நான்காம்தேதி வெளியாவதாக இருந்த விஷாலின் பாயும் புலி, சவாலே சமாளி , மற்றும் இம்மாதம் வெளியாவதாக இருந்த சிறிய பட்ஜெட் படங்களான போக்கிரி மன்னன், 9 திருடர்கள், பானு ஆகிய படங்களும்,. ஆர்யா – கிருஷ்ணா நடித்திருக்கும் யட்சன், பா.விஜய்யின் ஸ்ட்ராபெர்ரி மற்றும் பிரேம்ஜி அமரனின் மாங்கா , இப் படங்களைத் தவிர சிக்கிக்கு சிக்கிக்கிச்சு, ஜவ்வு மிட்டாய் , நடிகர் கவுண்டமணியின் 49 ஓ மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் ஆகிய படங்களும் வெளியாவதில் பெரும் சிக்கல் உருவாகியுள்ளது.