‘பாயும் புலி’ படத்தின் வெளியீடு தொடர்பாக, செங்கல்பட்டு விநியோகஸ்தர்களிடையே தயாரிப்பாளர் சங்கத்துக்கு பிரச்சினை எழுந்தபோது, எந்த ஒரு படமும் வெளியீடு இல்லை என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்களுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் நேற்று மாலை தீர்மானம் நிறைவேற்றியது. இதன் காரணமாக நாளை வெளியாக இருந்த பாயும் புலி,போக்கிரிமன்னன்,சவாலேசமாளி உள்ளிட்ட படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று காலை தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர கூட்டம் சென்னையில் நடைபெற்றது.அக்கூட்டத்தின் முடிவில் எடுத்த தீர்மானத்தில் தயாரிப்பாளர் சங்கம் கூறியிருப்பது, “ஒட்டுமொத்த தமிழ் திரையுலகின் வேண்டுகோளை ஏற்று திரையுலகின் நன்மை கருதி, தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு, தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகள் கூடி எடுக்கப்பட்ட முடிவின்படி, ஏற்கனவே திட்டமிட்டபடி 04/09/2015 அன்று ‘பாயும் புலி’ உட்பட அனைத்து நேரடி தமிழ்த் திரைப்படங்களும் வெளியிடப்படும்.
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளித்து படத்தை வெளியீடு செய்யும்படி, மேற்கண்ட அனைத்து அமைப்பு சங்கங்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். அல்லாமல் வேறு திரைப்படங்களை மனதில் வைத்து ‘பாயும் புலி’ திரைப்படம் உட்பட அனைத்துத் திரைப்படங்களையும் திரையிடாமல், தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தும் திரையரங்குகள் மீது, தமிழ் திரையுலகம் ஒன்று கூடி நடவடிக்கை மேற்கொள்வது குறித்து முடிவெடுக்கும் என்று ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. இவ்விவகாரம் தொடர்பாக , தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு கூறியதாவது, “அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து அக்டோபர் 23ம் தேதி முதல் எந்த ஒரு படமும் வெளியிடுவது இல்லை என்று முடிவெடுத்திருக்கிறோம். தீபாவளிக்கு எந்த படமும் வெளியாகாது. தமிழ் திரையுலகை புதுப்பிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்திருக்கிறோம். முதலில் தயாரிப்பாளர்களை காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, பின்னர் ரசிகர்களை திருப்திபடுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார் .
இந்நிலையில்,இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் நடத்திய அவசர ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, இன்று காலை பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூறியதாவது,:”நான் எந்த ஒரு தயாரிப்பாளரையும் மிரட்டவில்லை. ‘லிங்கா’ பெரும் நஷ்டமானதைத் தொடர்ந்து, ரஜினி சார் முன்வந்து கொடுத்த பணத்தில் மீதமுள்ள பணம் 2.75 கோடி தாணுவிடம் இருக்கிறது. அனைவருக்கும் கொடுக்கப்பட்ட பணத்தின் கணக்குகளை கடந்த 3 மாதங்களாக கேட்டு வருகிறோம். இதுவரை கொடுக்கவில்லை. அப்பணத்தை வைத்துக் கொண்டு ‘லிங்கா’ படத்தால் நஷ்டமடைந்த திரையரங்கு உரிமையாளர்களுக்கு சேர வேண்டிய பணம் அது. அப்பணத்தை கொடுங்கள் என கேட்கிறோம். இதையடுத்து நாளை பாயும்புலி,சவாலே சமாளி உள்ளிட்ட படங்கள் வெளியாதில் உள்ள சிக்கல் தற்காலிகமாக தீர்ந்துள்ளது.