அசல் : பிங்க். கதை அமைப்பு ; சுசித் சர்க்கார், ரிதேஷ் ஷா ,எச் .:வினோத் இயக்கம் ; எச்.வினோத், ஒளிப்பதிவு ; நீரவ் ஷா, இசை ; யுவன் ஷங்கர் ராஜா. நேரம் ;158 நிமிடங்கள் .
அஜித்குமார்,ஷ்ரத்தா ஸ்ரீ நாத்,அபிராமி, ஆண்டிரியா, ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே,
**************************
தெலுங்கில் இருந்து ‘விதி’ வந்தது.
இந்தியில் இருந்து ‘நேர்கொண்ட பார்வை ‘வந்திருக்கிறது.
விதியின் கதைக்களமும் பின்னதின் கதைக் களமும் ஏறத்தாழ பெண்ணுடனான உடல் தொடர்பானதுதான்.
விதியில் சுஜாதா- -ஜெய்சங்கர் நீதிமன்ற வாதாடலில் ஆரூர்தாசின் வசன ஆளுமை கை கொடுத்தது.அது வெள்ளிவிழாப் படமாக அமைந்தது.
நேர்கொண்ட பார்வையில் அஜித்குமார், ரங்கராஜ் பாண்டே வாதாடலில் அஜித்குமாரின் கம்பீரக்குரலுக்கு பாண்டேயின் குரல் ஈடு கொடுக்க இயலவில்லை.ஆனால் வசனம் வலுவாக இருக்கிறது. சில இடங்களில் ‘எதையோ’ கொண்டு அடிப்பது போன்ற உணர்வு.!
காலங்கள் மாறி விட்டது. அதற்கேற்ப கதையின் பின்புலமும் மாறி இருக்கிறது.
அட்டகாசமான ஆட்ட, பாட்டமுடன் தியேட்டரே அதிரும் வகையில் காட்சி தொடங்குகிறது.
அல்ட்ரா மாடர்ன் பெண்கள் ஷ்ரத்தா,அபிராமி,ஆண்ட்ரியா மூவரும் அந்த இசை நடன விழாவில் கலந்து கொண்டு முடிந்தபின் ஆதிக் ரவிச்சந்திரனின் நண்பர்களுடன் லைட்டா தண்ணி அடிக்கிறார்கள்.
இதை ஆதிக் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அவளை வன்புணர்வு செய்ய முற்படுகிறார்.
ஆண்களுடன் தண்ணி அடிக்கிற பெண்கள் ‘அதுக்கு’ கூப்பிட்டால் இணங்க மாட்டார்களா என நினைத்து அங்கே இங்கே தொட அவள் தன்னைக் காப்பதற்காக பாட்டிலால் நெற்றிப் பொட்டு ஓரமாக பெரும் போடு போட்டு விட்டு அந்த பெண்களுடன் தப்பி விடுகிறாள்.
ஆதிக் பெரிய வீட்டுப் பிள்ளை.ஜெயப்பிரகாஷின் வளர்ப்பு.
அடி பட்ட புலியின் வெறியில் ஆதிக்.பழி தீர்க்க புறப்படுகிறார். போலீஸ் கேசாகி வழக்கு மன்றத்தில் இரு தரப்பு வக்கீல்களின் வாதங்கள்.தீர்ப்பு என இப்படியாக நடந்து முடிகிறது கதை.
பொதுநல நாட்டமுள்ள திறமையான வக்கீலாக அஜித். மனைவி வித்யா பாலன்,இரட்டைப் பிள்ளைகள் இவர்களது எதிர்பாராத இழப்பினால் அஜித் மனம் உடைந்து சிகிச்சைப் பெற்று வருகிறார். அதீத கோபம்.அவரை தொழில் இருந்து விலக்கியே வைத்திருக்கிறது
பெரும்பாலும் சோகமே என்றிருந்தாலும் துடிப்பான நடிப்பு. அந்த கேரக்டருக்கு எது நியாயமோ அதை சிறப்பாக செய்திருக்கிறார். குரல் பெரிய பிளஸ். கிளைமாக்சில் ஆதிக் ரவிச்சந்திரனை மடக்கி குற்றவாளியின் வாயிலாகவே உண்மையை வாங்கிய சாதுர்யம் அருமை. இயக்குநரின் கடுமையான உழைப்பு தெரிகிறது. வெல்டன் வினோத். அஜித்தின் ‘நோ’ சொல்கிற விளக்கம் அப்ளாஸ்களை அள்ளும்
ஷ்ராத்தாவா ,அபிராமியா யார் பெஸ்ட் என்றால் சந்தேகமில்லாமல் ஷ்ராத்தாவை கை காட்டிவிடலாம். கோர்ட்டில் கூனிக் குறுகி நாணி உடைந்து கதறுகிறபோது தியேட்டர் உறை நிலைக்குப் போகிறது.
பிக்பாஸ் அபிராமியா இது என கேட்கும் அளவுக்கு சிறந்த நடிப்பு. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் கேரக்டரும் அவரது பழி வாங்கும் முகமும் நல்ல வில்லனை த் தந்திருக்கிறது..
வசனத்தில் அப்படியொரு கோபமும் கனிவான குணமும் நிறைந்து இருக்கிறது.
காட்சிகளுக்கு ஏற்ப டோன்களை மாற்றி ஒளிப்பதிவு செய்வதில் நீரவ்ஷா கெட்டிக்காரர் என்பதை இந்த படத்திலும் காட்டியிருக்கிறார்.வெறுமைக்கு இதுதான் சரி என்பதைப்போல சோகம் கப்பிய அஜித் குமாருக்கு அவர் செய்திருக்கிற லைட்டிங் அருமை.
முதன்முதலாக பாண்டே வக்கீலாக வாதாடி இருக்கிறார். தொடக்கத்தில் தலையாட்டுதல் படு செயற்கையாக இருந்தது.ஆனால் போகப்போக சரியாகி விட்டது. நல்ல இடம் கிடைக்கலாம்.
“தீ முகம் ,”வானில் இருந்த ” இரு பாடலும் யுவனுக்கு மணி மாலைகள். பின்னணி டாப்.
படமும் டாப். நீளத்தைக் குறைத்திருக்கலாம்.
சினிமா முரசத்தின் மார்க். 3 / 5