
இந்தபடம் குறித்து தொல்.திருமாவளவன் பேசும்போது, “இந்த படத்தை நான் பார்த்துவிட்டேன். ஞானச்செருக்கு என்கிற பெயரை இன்னும் சாதாரண தமிழில் சொன்னால் அறிவுத்திமிர் என்று சொல்லலாம். தந்தை-மகன், ஆசிரியர்-மாணவன், தலைவர்-தொண்டன் என ஒவ்வொரு துறையிலும் தலைமுறை இடைவெளி இருப்பது போல சினிமாவிலும் இருக்கிறது. இங்கே வாழ்த்த வந்திருக்கும் மூத்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கும் இந்த படத்தை இயக்கியிருக்கும் தரணி ராஜேந்திரனுக்கும் இருக்கும் இடைவெளி கூட தலைமுறை இடைவெளிதான். இதைத்தான் இந்தப்படத்தில் கருப்பொருளாக பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர் தரணி ராஜேந்திரன். காதல், டூயட், குத்துப்பாட்டு, சண்டைக்காட்சி என எந்தவித வணிக நோக்கமும் இல்லாமல் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. கதையின் கருப்பொருளே ஓவியர் வீர சந்தானம் தான். ஓவியர் வீர சந்தானத்துடன் போராட்டக் களங்களில் நான் கைகோர்த்து நின்றவன்.. என்னுடைய புத்தகங்களுக்கு அவரது ஓவியங்களை வழங்கி அலங்கரித்திருக்கிறார். மிகச்சிறந்த ஈழ உணர்வாளர். தரணி ராஜேந்திரன் யாரும் உணர முடியாததை உணர்ந்திருக்கிறார். யாரும் தொடமுடியாத ஒரு விஷயத்தை தொட்டிருக்கிறார். யாரும் விவரிக்க முடியாத ஒரு விஷயத்தை விவரித்திருக்கிறார். இதுவே அவருக்கு உள்ள ஞான வலிமையை காட்டுகிறது.

இந்த படத்தை பார்த்த பாரதிராஜா நான் எடுக்க வேண்டிய படத்தை எடுத்திருக்கிறாய் என இயக்குநரை பாராட்டியதாக சொன்னார்கள். அது தான் இந்த படத்தின் வெற்றி, இந்த முப்பது வயது இளைஞர், பாரதிராஜா, எஸ்பி முத்துராமன் போன்ற முதுபெரும் இயக்குனர்களின் சிந்தனைக்கு மாறி அவர்கள் நிலையில் இருந்து சிந்தித்து இந்த படத்தை எடுத்திருக்கிறார். மிகச்சிறந்த படைப்பாளிக்கு வெற்றி தோல்வி ஒரு பொருட்டே அல்ல.
சில படங்களைப் பார்க்கும்போது இந்த படத்தில் ஒன்றுமே இல்லை இதெல்லாம் எப்படி ஓடுகிறது என கேள்வி எழும். ரஜினிகாந்த் சினிமாவில் நுழைந்தபோது அவரது படத்தை பார்த்தவர்கள் ஆள் பார்க்கவே கலராகவும் இல்லை, எம்ஜிஆர் மாதிரி பளபளப்பாகவும் இல்லை. ஆனால் படம் எப்படி ஓடுகிறது என்கிற கேள்வி எழுந்தது ஆனால் ரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகியோர் இதையெல்லாம் மாற்றினார்கள். தரணி இராஜேந்திரன் இந்த இளம் வயதில் மிகுந்த முதிர்ச்சியடைந்த பார்வையை கொண்டிருக்கிறார். அருமையான ஒரு கதையை கருப்பொருளாக தேர்வு செய்திருக்கிறார். இளம் இயக்குனர்கள் எதிர்பார்க்காத ஒன்றை எண்ணிப்பார்த்து முற்போக்கு சிந்தனையுடன் இதை அணுகியிருக்கிறார்” இவ்வாறு அவர் பேசினார்.