ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழக அரசு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை திறந்துள்ளது.இதற்கு எதிராக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக இன்று சிறப்பு வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் நீதிமய்யம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
வணக்கம்.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இன்றோடு 44 நாட்கள் ஆன நிலையில்
மருத்துவர்களும், காவல்துறை பணியாளர்களும், தூய்மைப்பணியாளர்களும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டு இருக்கின்றனர்.
கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவேண்டி அரசு சொன்னதைக் கேட்டு, நடுத்தர மக்கள் வீட்டில் அடைபட்டுக் கிடக்கின்றனர்.
ஏழைகள் வாழ்வாதாரத்தை தொலைத்து வாழ வழி தேடிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இத்தனை நாள் போராடி நோய்த்தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருந்ததையும் மக்களின் துயரங்களை மதிக்காமலும் ஒரே நாளில் டாஸ்மாக் திறந்து விட்டு இருக்கின்றது அரசு.
*இதை கருத்தில் கொண்டு டாஸ்மாக் திறப்பிற்கு எதிராக மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக இன்று சிறப்பு வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது*
*இன்று மதியத்திற்குள் அவ்வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது*
நன்றி.ஊடகப்பிரிவு.மக்கள் நீதி மய்யம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் ,
“மருத்துவர்கள்,காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டு இருக்கின்றனர்.நடுத்தர மக்கள் வீட்டில் கட்டுண்டு இருக்கின்றனர்.ஏழைகள் வாழ வழியின்றி தவிக்கின்றனர். தற்போது டாஸ்மாக் திறந்து விட்டு, ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா?”என பதிவிட்டுள்ளார்.