சின்னத்திரை படப்பிடிப்பிற்கு 20 பேர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 50 சதவீத தொழிலாளர்களை கொண்டு, படப்பிடிப்பை நடத்த அனுமதிக்க வேண்டும், என அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து, ஆர்.கே.செல்வமணி, குஷ்பு உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.இந்நிலையில்,தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று சின்னத்திரை படப்பிடிப்பில் 60 பேர் பணியாற்றலாம் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
“தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று சில நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பை தொடங்குவதற்கு 21 5 2020 அன்று நான் அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தேன் அனுமதி அளிக்கப்பட்ட அதிகபட்ச நடிகர் நடிகை மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு, படப்பிடிப்பை நடத்த இயலாத சூழ்நிலை உள்ளதாகவும், இதனை உயர்த்தி அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் செய்தித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
அவர்களது கோரிக்கை குறித்து செய்தித்துறை அமைச்சர் என்னுடன் கலந்து ஆலோசித்தார். மேற்படி சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று, அதிகபட்சமாக 60 நடிகர், நடிகை ,தொழில்நுட்ப பணியாளர்களைக் கொண்டு, சின்னத்திரை படப்பிடிப்பை நாளை (31 5 2020) முதல் நடத்த அனுமதித்து உத்தரவிடப்படுகிறது.
சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடமும் , பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவரிடமும், ஒவ்வொரு சின்னத்திரை தொடரில் முழு படப்பிடிப்பும் ஒருமுறை மட்டும் அனுமதி பெறுதல் வேண்டும். சின்னத்திரை படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அனைவரும் மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
சின்னத்திரை தயாரிப்பாளர்கள் அதனை உறுதி செய்துகொண்டு, படப்பிடிப்புகள் நடத்திட வேண்டும். இவ்வாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.