பிரபல திரைப்பட பின்னணிப் பாடகரான எஸ்பி பாலசுப்பிரமணியம், லேசான கொரோனாத் தொற்று காரணமாக கடந்த 5ஆம் தேதி சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று பாடகர் எஸ்பி பாலசுப்பிமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் அம மருத்துமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் எஸ்.பி.பியின் நெருங்கிய நண்பரான இசைஞானி இளையராஜா எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைய வேண்டி உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவ்வீடியோவில் இளையராஜா கூறியுள்ளதாவது,
“பாலு, சீக்கிரமா எழுந்து வா. உனக்காக காத்திருக்கிறேன் நம்முடைய வாழ்வு வெறும் சினிமாவோடு முடிந்து போவதில்லை சினிமாவோடு தொடங்கியதும் அல்ல. எங்கேயோ மேடைக் கச்சேரிகளில் நாம் ஒன்று சேர்ந்து ஆரம்பித்த இந்த இசைநிகழ்ச்சி, அந்த இசை நமது வாழ்வாகவும், நமக்கு முக்கியமான வாழ்வுக்கு ஆதாரமாகவும் அமைந்தது,
அந்த மேடை கச்சேரிகளில் ஆரம்பித்த நமது நட்பும், இசையும், இசை எப்படி ஸ்வரங்களை விட்டு ஒன்றைவிட்டு ஓன்று பிரியாமல் இருக்கிறதோ,
அதே போல உனது நட்பும், என்னுடைய நட்பும், நமது நட்பும் எந்தக் காலத்திலும் பிரிந்ததில்லை. நாம் சண்டை போட்டாலும் சரி, நம் இருவருக்கும் சண்டை இருந்தாலும் அது நட்பு. சண்டை இல்லாமல் போனபோதும் அதன் நட்பு .என்பதையும் நன்றாக அறிவாய். நானும் நன்றாக அறிவேன்.அதனால் இறைவனிடம் நான் பிரார்த்திக்கிறேன்.
நிச்சயமாக நீ திரும்பி வருவாய் என்று என்னுடைய உள்ளுணர்வு சொல்கிறது. அது நிஜமாக நடக்கட்டும் என்று இறைவனை நான் பிரார்த்திக்கிறேன். பாலு, சீக்கிரம் வா….இவ்வாறு இளையராஜா கண்கள் கலங்க,மிகவும் உருக்கமாக கூறியுள்ளார்.
இந்நிலையில்,கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அச்சப்படும் நிலை இல்லை எனவும் அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.