கடந்த சில நாட்களுக்கு முன்பு,ரஜினி தன் அரசியல் பிரவேசத்தை அதிரடியாக அறிவித்தார்.வரும் டிசம்பர் 31-ல் கட்சி தொடங்கும் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.அரசியல்கட்சி குறித்த அறிவிப்பைவெளியிட்டு, பெங்களூருவில் அவரது அண்ணன் சத்ய நாராயணாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.இதையடுத்து உடனடியாக சென்னை திரும்பிய ரஜினிகாந்த்,சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியன் மற்றும் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கட்சி அலுவலகம் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.இதனிடையே ராகவேந்திரா மண்டபத்தில் கட்சி அலுவலகம் செயல்படும் எனக் கூறப்பட்ட நிலையில்,தி நகரில் அலுவலகம் தேடி வருவதாகவும் கூறப்பட்டது.ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி, தற்காலிகமாக போயஸ் கார்டனிலேயே கட்சி அலுவலகம் செயல்படும் என தெரிய வந்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளும் முழுவீச்சில் தொடங்கியுள்ளன.போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீடு மற்றும் தெருவில் அதி நவீன சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், ரஜினியின் வீட்டிற்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. தினசரி 12 போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர்.இன்று காலை போயஸ் கார்டனில் உள்ள தன்னுடைய வீட்டில், அடுத்த ஒரு வாரத்துக்குள் டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்வது தொடர்பாக பிரபல வக்கீல்களுடன் ரஜினி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ராகவேந்திரா மண்டபத்திற்கு சென்ற ரஜினி, அங்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜூன மூர்த்தி, மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் மற்றும் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், புதுகட்சியின் தலைவர், பொருளாளர், பொதுச்செயலாளர் ஆகிய 3 முக்கிய பொறுப்புகளில் யாரை நியமிப்பது என்பது குறித்து தீவிரமாக விவாதித்தாக தெரிகிறது.
ஏற்கனவே அர்ஜூன மூர்த்தி,தமிழருவி மணியன் ஆகியோரது நியமனத்தில் ரஜினி மக்கள்மன்ற நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருவதால், புதிய கட்சியின் தலைவர், பொருளாளர், பொதுச்செயலாளர் ஆகிய 3 முக்கிய பதவிகள் யாருக்கு? என்ற எதிர்பார்ப்பும் பரபரப்பும் நிர்வாகிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
மேலும், கட்சி தொடர்பான போஸ்டரில் அர்ஜுனமூர்த்தி, தமிழருவி மணியன்,உள்பட யார் புகைப்படத்தையும் அச்சிடக்கூடாது தலைவர் ரஜினியின் புகைப்படம் மட்டுமே போஸ்டரில் இடம்பெற வேண்டும் என நிர்வாகிகளுக்கு ரஜினி மக்கள் மன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.