“கடவுளும் நானும் பேசிடும் பொழுது தரகர்கள் எதற்கு நடுவினில்!”
நியாயமான ,நேர்மையான கேள்வி.
இதை உரத்து சொன்னால் நாத்திகன் என்று சொல்லிவிடுவார்கள் .ஆன்ட்டி இந்து என்று பட்டம் கட்டி சந்திக்கு சந்து இழுப்பார்கள்.
“நானும் கடவுளும் நேரினில் பேசிடும் நிலையை என் தடுக்கிறாய் இடைத் தரகனே என்பதுதான் ஒரு பக்தனின் கேள்வி.
இதை கருத்தாழமிக்க கவிதையாக வடித்திருக்கிறார் மதன் கார்க்கி.
இதற்கு ஒளி வடிவம் தந்து ஒலியும் கொடுத்திருக்கிறார் உயிரோவிய ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேனன்.
அற்புதமாக இருக்கிறது.
இடைத்தரகர்களை சாட்டை கொண்டு இழுத்திருப்பது புரிகிறது.
ஆனாலும் மக்கள் உணர்ந்து திருந்தும்போதுதானே தரகர்கள் ஒழிவார்கள் !
அது என்று நிகழும்? ஆயிரம் ஆச்சரியக்குறிகள்.!!!!!!
‘கடவுளும் நானும்’ எனும் தலைப்பில் அந்தப் பாடல் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகிறது.
இயக்குநர் ராஜீவ் மேனன் இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய இசையமைப்பில் சர்வம் தாளமயம் படத்தில் ‘வரலாமா உன்னருகில்’ எனும் பாடல் வெளியாகி இசை இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தப் பாடலை எழுதிய பாடலாசிரியர் மதன் கார்க்கி திரைப்படப் பாடல்கள் அல்லாது நூற்றுக்கணக்கான தனியிசைப் பாடல்களையும் வெளியிட்டுள்ளார்.
இவர்கள் கூட்டணியில் உருவாகி வெளியாகும் ‘கடவுளும் நானும்’ எனும் பாடல் கடவுளுக்கும் மனிதனுக்குமான நெருக்கத்தைப் பற்றி பாடுகிறது. இந்தப் பாடலுக்கு ராஜீவ் மேனன் காம்போஜி ராகத்தில் மெட்டமைத்துள்ளார்.
இந்தப் பாடல் மைலாப்பூரில் நடந்த ஒரு இசை விழாவில் முதன்முதலாக அரங்கேற்றப்பட்டது.
தன்னுடைய ஒளிப்பதிவுக்கென்றே பெரும் ரசிகர் கூட்டத்தைக் கொண்டவர் ராஜீவ் மேனன். இந்தப் பாடலுக்கான ஒளிப்பதிவை ராஜீவ்மேனனும் அவருடைய மைண்ட் ஸ்கிரீன் திரைப்பட கல்லூரி ஒளிப்பதிவு மாணவர்களும் இணைந்து செய்துள்ளனர்.