நடிகரும் மக்கள்நீதிமய்ய கட்சியின்தலைவருமான கமல்ஹாசன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,” மண், மொழி, மக்கள் காக்க அணி திரள்வீர் மய்யத்தீரே!
அன்பிற்குரியவர்களே,வணக்கம்.
ஊழலற்ற நேர்மையான ஆட்சியின் மூலமாக தமிழகத்தின் பொருளியலைச் சீரமைக்க
வேண்டும். மக்களின் வாழ்க்கைத் தரத்தை பன்மடங்கு உயர்த்த வேண்டும்.
சீரழிக்கப்படும் சூழியலைத் தடுத்து இயற்கை வளங்களை மீட்டெடுக்க வேண்டும். சம
நீதியும், சமூக நீதியும், பெண்களுக்குச் சம உரிமையும் பாதுகாப்பும் கொண்ட
சமுதாயத்தை உருவாக்க வேண்டும். உலகிற்கே வழிகாட்டும் முதன்மையான
மாநிலமாக தமிழகம் சிறக்க வேண்டும் எனும் பெருங்கனவுகளோடு ‘மக்கள் நீதி
மய்யத்தை’ நாம் துவக்கி வெற்றிகரமாக மூன்றாண்டுகளை நிறைவு செய்திருக்கிறோம்.
ஊருக்கு உழைத்திடல் யோகம் என தமிழகத்தைச் சீரமைக்க என்னோடு சேர்ந்து
பாடுபட்டு வரும் உங்கள் ஒவ்வொருவருக்கும் இந்தத் தருணத்தில் நெஞ்சார்ந்த
வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நாம் வேடிக்கை மனிதரும் அல்ல. வேடிக்கை பார்ப்பவரும் அல்ல என்பதைத்
தமிழகம் உணர்ந்திருக்கிறது. நேர்மையான, ஊழலற்ற நல்லாட்சிக்கான வேட்கை
எங்கும் நிலவுகிறது என்பதை நமது பிரச்சாரப் பயணத்தில் கண்கூடாகப் பார்க்க
முடிகிறது. நல்லாட்சி தருவதற்குரிய தகுதியும் அருகதையும் நமக்குத்தான் இருக்கிறது
என்பதே மக்களின் நம்பிக்கை.
ஆட்சி அதிகாரத்திற்குக் காத்திராமல், ஓட்டரசியல் செய்யாமல் தமிழகத்தின் மீதான
உண்மையான அக்கறையில் கிராம சபைகள் மீட்டெடுப்பு, ஸ்டெர்லைட் போராட்டம்,
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பேரிடர் கால நிவாரணப் பணிகள் , நாமே தீர்வு என நாம்
தொடர்ச்சியாக செய்து வரும் களப் பணிகளும், சட்டப் போராட்டங்களும்,
விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நமது கட்சியின் மரபணுவான ‘நேர்மை – திறமை –
அஞ்சாமை’ஆகியவற்றை வெளிச்சம் போட்டு காட்டுபவை.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சின்னம் கிடைத்த இருபதே நாட்களில் நாம் பெற்ற
வாக்குகள் அனைவரையும் விழிவிரியச் செய்த சாதனை. இன்று விரிவுபடுத்தப்பட்ட
கட்டமைப்புடன், அற்புதமான செயல் திட்டங்களுடன், பிரம்மாண்டமான மக்கள்
செல்வாக்குடன் தமிழகத்திலும், புதுவையிலும் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலில்
களம் காண இருக்கிறோம். இந்தத் தேர்தலில் நிச்சயம் பெருவெற்றி கொள்வோம்
என்பதன் அறிகுறிகள் தெளிவாகத் தென்பட ஆரம்பித்துவிட்டன. உறுதியாக நாம்
வெல்வோம்.
நான்காவது ஆண்டு துவக்க விழாவைக் கொண்டாடும் வகையிலும், நமது மகத்தான
தேர்தல் வெற்றிக்குக் கட்டியம் கூறும் வகையிலும் பிரம்மாண்டமான மாநாடு வரும்
பிப்ரவரி 21-ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மண்ணையும், மொழியையும், மக்களையும் காக்கவே நாம் களம் இறங்கி
இருக்கிறோம். இந்த மகத்தான பயணத்தில் எதுவும் நமக்குத் தடையல்ல. நாம்
ஒருபோதும் துவளும் படையல்ல என்பதைத் தமிழகத்திற்கு உணர்த்த மக்கள் நீதி
மய்யத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் இந்த மாநாட்டிற்கு அணி திரள வேண்டும்.
உங்கள் உற்றார் உறவினர்கள், சுற்றத்தார், நண்பர்கள், ஒத்த கருத்தாளர்கள்,
அறம்சார் மனிதர்கள், நேர்மையாளர்கள், மக்கள் சேவகர்கள் புடை சூழ பிப்ரவரி 21-
ஆம் தேதி சென்னை நோக்கி அலை அலையாகத் திரண்டு வாருங்கள்.
பழி போடும் அரசியல், பழி வாங்கும் அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு வழி
தேடும் அரசியல், வழி காட்டும் அரசியலுக்குத் துவக்க உரையை சேர்ந்து எழுதுவோம்.
ஊர் கூடி தேர் இழுத்தால், நாளைநமதே” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.