
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகிற சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று இரவு நடந்தது.. இக் கூட்டத்தில் தங்களது கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. முடிவில்,கே.எம்.காதர் மொய்தீன் தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சி ஆகிய 2 கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு குறித்து இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்த தி.மு.க. தரப்பில் இருந்து அழைப்பு விடுப்பது என முடிவு செய்யப்பட்டு உடனடியாக அழைப்பும் விடுக்கப்பட்டது,.
அதன்படி இன்று மாலை 4 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் முதலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அதனை தொடர்ந்து 5 மணிக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.இன்று மாலையே இக்கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்டுவிடும் என தெரிகிறது.
இக்கட்சிகளைத் தொடர்ந்து திமுகவின் கூட்டணி கட்சிகளான மதிமுக மற்றும் விசிக ஆகிய 2 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து நாளை பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.. மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தற்போது தமிழக சுற்றுப்பயணம் நிறைவடைந்தவுடன் காங்கிரஸ் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தும் என்கிறது அறிவாலய வட்டாரம்.












