தமிழ்த்திரையுலகில் அருண்விஜய்,ஷாம்,குட்டிராதிகா ஆகியோரது நடிப்பில் வெளியான இயற்கை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.பி.ஜனநாதன். (வயது 61) தொடர்ந்து ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இயக்குனர் எஸ்.பி. ஜனநாதனுக்கு இன்னும் திருமணமாக வில்லை. தற்போது விஜய் சேதுபதி, சுருதிஹாசன் ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் லாபம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் எடிட்டிங்,டப்பிங் ஆகிய பணிகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த 11-ம் தேதி காலை வழக்கம் [போல் இப்படத்தின் பணிகளில் ஈடுபட்டு வந்தவர் .மதியம் ராயப்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு சாப்பிடச் சென்றார். வழக்கமாக 1 மணி நேரத்தில் மீண்டும் அலுவலகத்திற்கு திரும்பி விடும் இயக்குனர் ஜனநாதன் 3 மணி ஆகியும் அலுவலகம் திரும்பவில்லை. அவரது உதவியாளர்கள் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோதும் அவரிடமிருந்து பதிலில்லை.
இதையடுத்து பதறிப்போன உதவியாளர்கள் ஜனநாதன் வீட்டுக்கு சென்றபோது அவரது வீட்டின் கதவு திறந்து கிடந்தது . தரையில் ஜனநாதன் மயக்க நிலையில் கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உதவியாளர்கள், அவரை மீட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உள்ளதாகவும் , மருத்துவர் குழுவினரின் தொடர் கண்காணிப்பில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி இன்று காலை 10 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.இயக்குனர் ஜனாவின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக கச்சேரி ரோட்டில் உள்ளஅவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.