எஸ்டிஆர் தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த அகில இந்திய மாநிலச் செயலாளர் ‘குட்லக் சதீஷ்’கடந்த சில நாட்களாக கொரோனாதொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இது குறித்து கடும் அதிர்ச்சியடைந்துள்ள நடிகர் சிலம்பரசன் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான இரங்கல் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அன்புத் தம்பியும் காதல் அழிவதில்லை படத்திலிருந்து என்னோடு கூட இருந்து வரும் சகோதரனுமான குட்லக் சதீஷை அகாலத்தில் இழந்திருக்கிறேன்.உன்னை இழந்துவிட்டதை நம்பமுடியாமல் தவிக்கிறேன். உன் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லாது தவிக்கிறேன்.
நீ செய்த எல்லா உதவிகளுக்கும் நன்றி. அவசரப்பட்டு விட்டாய். போய் வா சகோதரா. அழுகையோடு வழியனுப்பி வைக்கிறேன்.கொரோனா வந்துவிட்டால் பயப்பட வேண்டாம். மன தைரியத்துடன் எதையும் சமாளிக்க முயலுங்கள். பயம் தான் நம்மை வீழ்த்துகிறது. பயம் தான் நம்மை குணமாவதில் இருந்து தடுக்கிறது. தேவையான மருத்துவம் பார்ப்பதை விட தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்ப்போம். சகோதரன் குட்லக் சதீஷை இழந்தது போல இன்னொருவரை இழக்க விரும்பவில்லை என உருக்கமாக அந்த கடிதத்தில் நடிகர் சிம்பு கூறியுள்ளார்.