நடிகரும்,தேமுதிக தலைவருமான விஜயகாந்த் திடீர் மூச்சு திணறல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து அடுத்து விஜயகாந்துக்கு என்ன ஆச்சு? என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.
இந் நிலையில் தேமுதிகவின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ சிகிச்சைக்காகவே சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும், ஓரிரு நாட்களில் அவர் மருத்துமனையில் இருந்து வீடு திரும்புவார் என குறிப்பிட்டு இருந்தது.
இது குறித்து நடிகர் சரத்குமாரும் தனது டுவிட்டரில், அன்பு நண்பர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்தி வெளியான நிலையில்,எல்.கே.சுதீஷை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன். கேப்டன் வழக்கமாக மேற்கொள்ளும் பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அவர் நலமுடன் உள்ளார் என தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என பதிவிட்டு இருந்தார்.இதனிடையே நடிகர் விஜயகாந்துக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில் நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்திருப்பதாகவும்தகவல்கள்வெளியான நிலையில்,இன்று மாலை மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வீடு திரும்பியுள்ளார்.