தமிழ் திரைத்துறைக்கு தனி ஓடிடி தளம்! அரசுக்கு இயக்குனர் சேரன் கோரிக்கை!!
கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் வீட்டினுள் முடங்கி கிடந்த மக்களுக்கு ஓடிடி தளங்கள் பெரும் வரப்பிரசாதமாகின.இதையடுத்து மீண்டும் தளர்வுகள் அறிவித்து திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் தியேட்டருக்கு வருவதற்கு பெரிதும் ஆர்வம் காட்ட வில்லை .ஓடிடி தளங்களிலேயே புதிய படங்கள் பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தனர். தற்போது கொரோனா 2 வது அலை காரணமாக மீண்டும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து ஒடிடி தளங்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வரவேற்பால் கேரள அரசு மலையாள திரைத்துறைக்கென பிரத்யேகமாக ஒடிடி தளம் ஒன்றை தொடங்கி உள்ளன. இந்த ஒடிடி தளம் வரும் நவம்பர் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
இந்நிலையில், தமிழ் திரைத்துறைக்கு தனி ஓடிடி தளம் உருவாக்கப்பட வேண்டும் என இயக்குனர் சேரன் தனது டுவிட்டர் மூலம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் .இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது,
“இதுபோன்ற முயற்சி நமது தமிழ் திரைப்படத்துறைக்கும் தமிழக அரசால் உருவாக்கப்படவேண்டும். சிறு முதலீட்டு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களுக்கு இதன் மூலமே விடிவு காலம்.. அரசுக்கும் வருமானம் கிடைக்க வாய்ப்பு அதிகம். தமிழ் மொழிக்கென தனி OTT தளம் அவசியம்” என்று கூறியுள்ளார்.சேரனின் இக்கருத்துக்கு திரையுலகினர் பலரும் பெரிதும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்