தமிழ் சினிமாவில் தொடர்ந்து சிரிப்பு பேய் திரைப்படங்களாக வெளிவந்த நிலையில், சீரியசான பேய் கதை திரைப்படமாக ‘3.33’ வெளிவந்திருக்கிறது. டான்ஸ் மாஸ்டர் சாண்டி முதன்மை கதாபாத்திரமாக நடித்திருக்க அவருடன் சுருதி, ரமா, ரேஷ்மா, மைம் கோபி, சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இயக்குநர் நம்பிக்கை சந்துரு இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தை டி.ஜீவிதா கிஷோர் தயாரித்துள்ளார்.
முதன்முறையாக கதாநாயகனாக சாண்டி நடித்துள்ள இந்தப்படம் பார்வையாளர்களை பயமுறுத்துமா?
குடும்பத்துடன் புதிய வீட்டில் குடியேறும் சாண்டியை சில அமானுஷ்யமான விஷயங்கள் பயமுறுத்துகின்றன. அதை முதலில் பெரிதாக எடுத்து கொள்ளாத சாண்டி அடுத்தடுத்த நிகழ்வுகளால் நிலை குலைந்து போகிறார். ஒவ்வொரு நாளும் 3.33 மணியிலிருந்து 3.34 வரை சரியாக ஒரு நிமிடம் நடக்கும் சம்பவங்கள் அவரது வாழ்க்கையில் மிகப்பெரும் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு நாளும் அவருக்கு சித்ரவதை தான். அதன் உச்சக்கட்டமாக குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் கொலை செய்ய முயல்கிறார். ஏன் அப்படி நடந்து கொள்கிறார். என்ன நடந்தது. என்பது தான் ‘3.33’ படத்தின் திக்.. திக்… திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!
சாண்டிக்கு ஒருவிதமான மன குழப்பத்தில் இருப்பது போன்ற கதாபாத்திரம் என்பதால் அதில் அப்படியே பொருந்தி போகிறார். அவரைப்போலவே சாண்டியின் காதலி நாயகி ஸ்ருதி, அம்மா ரமா, அக்கா ரேஷ்மா ஆகியோரும் நன்றாகவே நடித்துள்ளனர்.
3.33 மணியிலிருந்து 3.34 வரை 1 நிமிடம் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களும் பயமுறுத்துகிறது. இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், ‘3.33’ னினைப் பற்றி விவரிக்கும் போது திகிலூட்டுகிறது. அதே போல் மைம் கோபி சாண்டியை எச்சரித்து விட்டு செல்லும் காட்சியும். இந்த இருவரின் கதாபாத்திரங்களும்கதை நகர்வுக்கு முக்கியமான கதாபாத்திரங்கள்.
ஹர்ஷவர்தனின் பின்னணி இசை மேலும் திகில் கொடுக்கிறது. சில இடங்களில் பதற வைக்கிறது. சதீஷ் மனோகரனின் ஒளிப்பதிவினையும் பாராட்டவேண்டும்.
நம்பிக்கை சந்துரு 1 நிமிட டைம் லூப்பில் அமானுஷ்யத்தை சேர்த்து திறமையான திரைக்கதை அமைத்துள்ளார். ஒரு சம்பவத்தை வெவ்வேறுவிதமாக காட்டி பயமுறுத்துகிறார்கள். கடைசிவரை யூகிக்க முடியாத க்ளைமாக்ஸ்!
3.33 திரைப்படம், பேய் படம் பார்ப்பவர்களுக்கு பிடிக்கும்.