“ஜெயலலிதா கொலை செய்யப்பட்டாரா ,இல்லையா “என்பதைத் துருவிக் கண்டுபிடிப்பதற்கு அன்றைய அதிமுக அரசு ஒரு கமிஷனைப் போட்டது.
கமிஷனை நியமிப்பது கிணற்றில் கல்லைப் போடுவதற்கு சமம் என்பார்கள்.
ஜெயலலிதா போன்ற பிரபலங்கள் தங்களைப் பற்றிய உண்மைகளை யாரிடமாவது சொல்லி அது புத்தக வடிவில் வந்திருந்தால் அதிலிருந்து உண்மைகளைப் பெற முடியும்.
ஆனால் பாவம் ஜெயலலிதா யாரும் எளிதில் நெருங்க முடியாத அளவுக்கு உயிர்த்தோழியின் பிடியில் இருந்தார் .அந்த மனுஷியின் மனதில் இருந்த உண்மைகள் மரித்துப்போயின.
ஆனால் இந்திய இசைக்குயில் லதா மங்கேஷ்கர் தன்னைப்பற்றிய உண்மைகளை புத்தக வடிவில் பேச வைத்து விட்டார்.
உங்களுக்குத் தெரியுமா?
இந்த இசைக்குயிலுக்கு ‘ஸ்லோ பாய்சன்’ கொடுக்கப்பட்ட கொடிய நிகழ்வு?
1962-அந்த மோசமான நிகழ்வு நடந்திருக்கிறது. அதுவும் வீட்டுக்குள்ளேயே சமையல்காரி வடிவில்.! கொஞ்சம் கொஞ்சமாக உணவில் கலந்து கொடுத்திருக்கிறாள் ஒரு சண்டாளி.!
அவரது 60 ஆவது வயது பிராயத்தில் நடந்ததை நஷ்ரீன் முன்னி கபீர் எழுதிய புத்தகத்தில் காணலாம். லதாவின் வாக்குமூலத்தை அப்படியே பதிவு செய்திருக்கிறார்கள்.
இது லதாஜி வாய்ஸ்.
“1962 -ல் நான் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தேன்.கிட்டத்தட்ட 3 மாதங்கள் அவஸ்தை.வயிறு சரியில்லை. வலி உயிரை எடுத்தது.வாந்தி எடுத்தேன் பச்சை நிறத்தில்!
எக்ஸ்ரே எந்திரமுடன் வீட்டுக்கு வந்த டாக்டர் வயிற்றை படம் எடுத்துப்பார்த்தார்.
“லதாஜி.! உங்களுக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்கிறார்.
பாட முடியாத அளவுக்கு பலவீனப்பட்டுப்போய் விட்டேன்.”என்கிறார் இந்தியாவின் இந்தூர் இளவரசி!
இவரது தங்கை உஷா அடுப்படிக்கு சென்று யாரும் சமையல்செய்ய வேண்டாம் .நானே சமைக்கிறேன் என்று சொல்லிவிட்டார்.
அதுநாள்வரை சமைத்துக்கொண்டிருந்த சமையல்காரி கம்பி நீட்டிவிட்டாள் யாரிடமும் சொல்லாமல்.!
சம்பளம் கூட வாங்க வில்லை ! எங்கே போனாள் என்பதும் தெரியவில்லை.
யாரோ லதாஜியை கொலை செய்ய முயன்று சமையல்காரியை பயன் படுத்தி இருக்கிறார்கள் .
என்ன உலகமடா இது!