தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் நிறைவடைவதையொட்டி, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த மாதம் 24-ம்தேதி நடக்க இருந்த நிலையில்,.கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு இன்று மீண்டும் கேகே நகரில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது .
இச் சங்கத்தில் மொத்தம் 2600 பேர் உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் அதிகாரபூர்வமாக ஓட்டுப்போடும் தகுதிபெற்ற உறுப்பினர்களாக சுமார் 1900 பேர் உள்ளனர்.இந்த தேர்தலில் ஆர்.கே.செல்வமணி தலைவராக போட்டியிடும் அணியில், செயலாளராக ஆர்.வி.உதயகுமார், பொருளாளராக பேரரசு, இணை செயலாளர்களாக சுந்தர்.சி, முருகதாஸ், லிங்குசாமி, ஏகம்பவாணன், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ரமேஷ்கண்ணா, மனோஜ்குமார், மனோபாலா, சரண் , திருமலை, ஏ.வெங்கடேஷ், ரவிமரியா, ஆர்.கண்ணன், முத்து வடுகு, நம்பி, ரமேஷ் பிரபாகர், கிளாரா உட்பட 19 பேர் போட்டியிட்டனர்.
இவர்களை எதிர்த்து மற்றொரு அணியில் கே.பாக்யராஜ் தலைவராகவும், செயலாளர் பதவிக்கு ஆர்.பார்த்திபன், பொருளாளர் பதவிக்கு வெங்கட்பிரபு போட்டியிட்டனர். இணைச்செயலாளர்கள் பதவிக்கு ராஜா கார்த்திக், விருமாண்டி, ஜெகதீசன், ஜெனிபர் ஜூலியட் ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஆர்.பாண்டியராஜன், மங்கை அரிராஜன், வேல்முருகன், சசி, பாலசேகர், வி.பிரபாகர், சாய்ரமணி, நவீன், சிபி, நாகேந்திரன், ஜெகன் ஆகியோர்களையும் சேர்த்து மொத்தம் 19 பேர் போட்டியிட்டனர்.காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 4 மணி வரை நடைபெற்றது. வழக்கறிஞர் ச.செந்தில்நாதன் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார்.
இந்நிலையில் இன்று காலை நடத்தப்பட்ட தேர்தலில் 100 தபால் ஓட்டுகள் உள்பட மொத்தம் 1520 வாக்குகள் பதிவாகின இதில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வெற்றி பெற்றார். அவர் 955 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இயக்குநர் கே.பாக்யராஜ் 566 வாக்குகளும் பெற்றனர். 389 வாக்குகள் கூடுதலாக பெற்று ஆர்.கே.செல்வமணி வெற்றி பெற்றார். இயக்குநர்கள் மாதேஷ், எழில் ஆகியோர் துணைத் தலைவர்களாகப் போட்டியின்றி ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர்.
செயலாளர், பொருளாளர், இணைச் செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன.