நடிகர் சங்கத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை; பாண்டவர் அணி முன்னிலை!
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு் ஜூன் 23-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் கே. பாக்கியராஜ் தலைமையிலான அணியும், நாசம் தலைமையிலான அணியும் போட்டியிட்டன.தலைவர், 2 துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என 29 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் சுமார் 2 ஆயிரத்து 500 வாக்குகள் பதிவாகின. அதில் 1,150 வாக்குகள் தபால் மூலம் பதிவாகின. நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் போட்டியிட்டனர்.
எதிர் தரப்பில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரஷாந்த் ஆகியோரும் போட்டியிட்டனர். இது தேர்தலில் சிலருக்கு வாக்கு அளிக்கும் உரிமை மறுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இது குறித்து தொடரப்பட்ட வழக்கு காரணமாக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வாக்கு எண்ணிக்கை மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டு தனியார் வங்கி லாக்கரில் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.இந்நிலையில், நடிகர் சங்க தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி கல்யாணசுந்தரம் நடந்து முடிந்த தேர்தல் செல்லாது என்று தீர்ப்பு அளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த மாதம் (பிப்ரவரி) 23-ந் தேதி விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் தீர்ப்பு செல்லாது என்றும், நடிகர் சங்க தேர்தல் செல்லும் என்றும் பரபரப்பு தீர்ப்பு அளித்து வாக்கு எண்ணிக்கை நடத்தவும் உத்தரவிட்டனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில்நடிகர் ஏழுமலை என்பவர்,‘சென்னை ஐகோர்ட்டு கடந்த மாதம் (பிப்ரவரி) 23-ந் தேதி கூறிய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பு அளிக்கும் வரை நடிகர் சங்க தேர்தலில் ஏற்கனவே பதிவான வாக்குகளை எண்ணவும், தேர்தல் முடிவுகளை அறிவிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என்றும் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனுமீதான விசாரணையை நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வுக்கு வந்தது. விசாரணையில், ‘தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019-ல் நடந்த தேர்தல் செல்லும் என்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக நடிகர் ஏழுமலை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததோடு நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண தடையில்லை என்றும் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில், ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில், இன்று காலை 8 மணி முதல் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் பாக்யராஜ் தலைமையிலான அணியை விட, நாசர் தலைமையிலான பாண்டவர் அணி முன்னணியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
துணைத்தலைவர் பதவிக்கு பதிவான வாக்குகளை விட 5 வாக்குகள் கூடுதலாக இடம் பெற்றிருப்பதாக ஐசரி கணேஷ் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. துணைத்தலைவர் பதவிக்கு விஷால் அணியின் பூச்சி முருகன் முன்னிலை பெற்ற நிலையில் நிறுத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.