“ஐயோ விட்ருங்கண்ணா “என்று தலை தெறிக்க ஓடுகிறார்கள் படம் பார்த்தவர்களிடம் கருத்துகள் கேட்டபோது.!
யாராச்சும் ஒருத்தர் லெஜண்ட் படத்தைப் பாராட்டுனுமே…ஊஹூம் !எல்லோருமே தியேட்டரை விட்டு வெளியேறினால் போதும்னு நினைத்து ஓடுகிறார்கள்.
அந்த அளவுக்கு சுண்ணாம்பு காளவாசலில் இருந்த உணர்வு…!
தனக்குத்தானே லெஜண்ட் என சொல்லிக்கொண்டு நடித்திருக்கிறார் அருள் சரவணன். இவருடன் ஊர்வசி ரவுத்தெலா ,நாசர் ,மறைந்த விவேக் ,ரோபோ சங்கர் ,பிரபு ,விஜயகுமார் ,யோகிபாபு ,மயில்சாமி ,மன்சூர் அலிகான் ஹரிஷ் பராடி ,சுமன் ,தம்பி ராமையா லதா ,சச்சு உள்ளிட்ட பலர் படத்தில் இருக்கிறார்கள்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசை ,வேல் ராஜ் ஒளிப்பதிவு இப்படி எல்லோருமே இந்த படத்தில் ராஜ வருமானம் பெற்றிருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட இந்த லெஜண்ட் படமும் 1953-ல் ஜூலை 10 ஆம் தேதி வெளியாகிய ‘உலகம் என்கிற படமும் ஒரே ரகம்.
நடிக பட்டாளம் ,பிரமாண்டம் என பரபரப்பாகியது அந்த காலத்து ‘உலகம்’ சிங்களத்து முனாஸ் தயாரித்தார்.இயக்குனர் மேற்பார்வையும் இவரே.! அன்று வெளியாகியபோ து தமிழ் ,ஆங்கிலம் உள்ளிட்ட எல்லா தினசரிகளுக்கும் 1 பக்க விளம்பரம். படத்தில் கேட்கப்படும் 6 கேள்விகளுக்கு 1 லட்சம் பரிசு .ஆனால் படம் ஒரு வாரம் கூட ஓடவில்லை.
இந்த லெஜண்ட் படத்தின் கதை என்ன?
அருள் சரவணனின் ஆத்மார்த்த நண்பர் ரோபோ சங்கரை சர்க்கரை நோய் கொள்ளை கொண்டு போக “விடுவேனா பார், சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கிறேன் “என்று கிளம்புகிறார் இன்டர் நேஷனல் விஞ்ஞானி அருள் சரவணன்.
கண்டு பிடிக்கிறார் .! ஆனால் பார்மசூட்டிகள் மாபியாக்கள் விடுவார்களா ? நமக்கு ரத்தம் வருமளவுக்கு போராடி தோற்பதுதான் கதை.
அருள் சரவணனுக்கு மேக் அப் ,சத்தியமாக பொருந்தவில்லை. உயரப்படுத்தப்பட்ட தலைமுடி ,மேக்கப் கேக்கினால் செய்யப்பட்டதோ என நினைக்கிற அளவுக்கு ஆளை அடிக்கிற ஒப்பனை.ஒல்லி உடம்பும் ,தலையும் தனித்தனியாக இருக்கின்றன. நடிப்பும் வரவில்லை.முகத்தில் பாவம் வரவில்லை.
காதலிக்கிறார் ,சண்டை போடுகிறார் ,வீர வசனம் பேசுகிறார். சூப்பர் ஸ்டாரின் சிவாஜி பாணி கதை .இயக்குநர்கள் ஜேடி -ஜெரி போராடியிருக்கிறார்கள் . வேல் ராஜின் ஒளிப்பதிவு தூக்கிப்பிடித்திருக்கிறது.ஹாரிஸ் ஜெயராஜ் கை கொடுத்திருக்கிறார்.
மக்கள் ஆதரவு தருவார்களா ? ஆடி தள்ளுபடி மாதிரி ஐடியா எதுவும் இருக்கிறதா ?