ஜெயம் ரவி நடித்து வெளியான ‘கோமாளி’ படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், கதாநாயகனாக நடித்து, எழுதி இயக்கியிருக்கும் படம் லவ் டுடே! இவருடன் இவானா, சத்யராஜ் , ராதிகா சரத்குமார், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதாநாயகன் பிரதீப் ரங்கநாதனும், கதாநாயகி இவானாவும் காதலிக்கிறார்கள். இது இவானாவின் அப்பா சத்யராஜுக்கு தெரிய வருகிறது. அவர், இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஒரு நிபந்தனை மட்டும் விதிக்கிறார். அதாவது பிரதீப் ரங்கநாதனும், இவானாவும் ஒருவொருக்கொருவர் தங்களது செல்போனை மாற்றி கொள்ள வேண்டும். என்பதே அந்த நிபந்தனை. இருவருடைய செல்போனுக்குள்ளும் பொதிந்து கிடக்கும் விவகாரங்கள் விஸ்வரூபம் எடுக்கிறது. இதனால் காதலர்களுக்கிடையே சண்டையும், சச்சரவும் ஏற்படுகிறது. அவர்கள் பிரிந்தார்களா? இல்லையா? என்பதை ‘5G’ ஸ்பீடில், ஜாலியான திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார், பிரதீப் ரங்கநாதன்.
கோமாளி படத்தின் மூலம் சுமாரான வெற்றியை பெற்ற இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தின் மூலம் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறார். அதே சமயம் நடிகராகவும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சற்றே கடினமான கதாபாத்திரம் என்றாலும் லாவகமாக நடித்து அறிமுக படத்திலேயே நடிகராக முழு வெற்றியையும் பெற்றிருக்கிறார். இவருக்கு பதிலாக ஜிவி பிரகாஷோ, தனுஷோ நடித்திருந்தால் இந்தப்படம் மாபெரும் வெற்றியை பெறும்.
கதாநாயகியாக நடித்திருக்கும் இவானா, இதற்கு முன்னர் நடித்த நாச்சியார், ஹீரோ படங்களில் பார்த்ததை விட இதில் அழகாகவும் சிறப்பாகவும் நடித்திருக்கிறார். காதல், மகிழ்ச்சி, துக்கம், கோபம் என அனைத்து விதமான உணர்வுகளையும் வெளிப்படுத்தி, நடிக்க தெரிந்த நடிகைகளின் பட்டியலில் இடம் பெறுகிறார்..
இவானாவின் அப்பாவாக நடித்திருக்கிறார் சத்யாரஜ். அளவாக, சிறப்பாக நடித்திருக்கிறார்.
பிரதீப் ரங்கநாதனின் அம்மாவாக நடித்திருக்கிறார் ராதிகா. கண்டிப்பதிலும், பாசம் காட்டுவதிலும் அம்மாவாக மனதில் நிறைகிறார்.
யோகி பாபுவுக்கு அருமையான கதாபாத்திரம்.. ரசிக்கவும், நெகிழவும் செய்கிறார்.
‘5G’ இளைஞர்களின் சோஷியல் மீடியா செல்போன் வாழ்க்கை, காதல் இவைகளை மய்யமாக வைத்து அறிவுரை சொல்லும் ஜாலியான படமே லவ் டுடே..