வினீத் ஸ்ரீனிவாசன், அர்ஷா சாந்தினி பைஜு, சுரஜ் வெஞ்சாராமூடு, சுதி கொப்பா, தன்விராம், ஜார்ஜ் கோரா, மணிகண்டன், விஜயன் கரந்தூர் உள்ளிட்ட பலர் நடிப்பினில் வெளியாகியிருக்கும் மலையாள டார்க் காமெடி’ படம், முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ். விமல் கோபால கிருஷ்ணனுடன் இனைந்து எழுதி, இயக்கியிருப்பவர், அபினவ் சுந்தர் நாயக் .
ஆக்சிடென்ட் இன்சூரன்ஸ் மூலம் நடக்கும் மோசடிகளை மைய்யப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள படமே, முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ். இந்த மோசடி எப்படி நடக்கிறது? என்பதை டார்க் காமெடி திரைக்கதையின் மூலம் அம்பலப்படுத்தி இருக்கிறார்கள்.
ஜூனியரான வக்கீல் வினீத் ஸ்ரீனிவாசன், எப்படியாவது தனி வக்கீலாக ஆகி விடவேண்டும் என்ற முயற்சியில், கேஸூக்காக தேடி அலைகிறார். இந்நிலையில் அவரது அம்மாவிற்கு வீட்டில் நடக்கும் ஒரு சிறிய விபத்தால், காலில் முறிவு ஏற்படுகிறது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அம்மாவை அழைத்து வருகிறார், வினீத் ஸ்ரீனிவாசன். அந்த மருத்துவமனையில் பல்வேறு விபத்துகளில் அடிபட்டு சிகிச்சைக்காக வருபவர்களிடம், ஆக்சிடென்ட் இன்சூரன்ஸ் மூலம் மோசடியாக பணம் பெற்று தருவதோடு, தனக்கான ஒரு பெரும் தொகையினையும் பெறுகிறார், வக்கீல் சுரஜ் வெஞ்சாராமூடு. இதை அனுபவபூர்வமாக உணரும் வினீத் ஸ்ரீனிவாசன், அவருடைய பாணியிலேயே கோர்ட் மூலம் தனி வக்கீலாக விபத்தினால் பாதிப்படைந்தவர்களுக்கு பணம் பெற்றுத்தருகிறார்.
சுரஜ் வெஞ்சாராமூடுவை விட, வினீத் ஸ்ரீனிவாசன் ஆக்சிடென்ட் இன்சூரன்ஸ் மோசடியில் மிகப்பெரிய நிலைக்கு வந்து விடுகிறார். ஒரு கட்டத்தில் சுரஜ் வெஞ்சாராமூடுவை கொலை செய்ய திட்டமிடுகிறார், வினீத் ஶ்ரீனிவாசன். ஏன்? எதற்கு? என்பதே முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் படத்தின் கதை.
டைட்டில் போடுவதிலிருந்து க்ளைமாக்ஸ் வரை நக்கல் நையாண்டிகளுடன் கதை சொல்கிறார்கள். அது பல இடங்களில் சிரிப்பினை வரவைக்கிறது. ஆனால் சிலருக்கு எரிச்சலை உண்டாக்கும். ரத்தம் கொட்டிய நிலையில் மயக்கத்தில் இருப்பவரிடம் வக்காலத்தில் அவருடைய கைரேகை பதிக்கும் இடங்கள், இறந்தவரையும் பணமாக பார்க்கும் கோணங்கள் சிலருக்கு பிடிக்காது. இருந்தாலும் எதார்த்தம் அது தானே!
முகுந்தன் உன்னியாக வரும் வினீத் ஸ்ரீனிவாசன் காட்சிக்கு காட்சி அதகளம் செய்கிறார். எந்தவிதமான குற்ற உணர்ச்சியுமின்றி சுரஜ் வெஞ்சாராமூடுவின் காருக்குள் பாம்பை விடுவது, தனது நண்பன் சுதி கொப்பாவை தனது காரிலேயே அழைத்து சென்று விபத்துக்குள்ளாக்குவது என எல்லாக்காட்சிகளிலுமே ஸ்கோர் செய்கிறார். பணமும் முன்னேற்றம் மட்டுக்குமே முன்னுரிமை தரும் கதாபாத்திரமாகவே ஜொலித்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கு இன்னொருவரை நினைக்க முடியவில்லை.
முகுந்தன் உன்னியின் காதாலியாக வரும் அர்ஷா சாந்தினி பைஜுவின் கதாபாத்திரம் பலே! முகுந்தன் உன்னியின் கதாபாத்திரத்தினை மிஞ்சுகிறது. டாக்டர் மாப்பிள்ளைக்கும், வக்கில் மாப்பிள்ளைக்கும் இடையே வித்தியாசத்தை கணக்கு போடும் விதத்தில் அவர், சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார்.
எல்லாமுமே வணிகமயமாகிவிட்ட நிலையில் இன்றைய நிலையினை அப்பட்டமாக எடுத்துச்சொல்லும் படம் முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்!