பிச்சைக்காரன் 2 படத்திற்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதி மன்றத்தில் ஆய்வுக்கூடம் படத்தயாரிப்பாளர் ராஜகணபதி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “கடந்த 2016ஆம் ஆண்டு ஆர்.பாண்டியராஜன் நடிப்பில் நான் தயாரித்த ஆய்வுக்கூடம் என்ற படத்தின் கதையை காப்பியடித்து பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனி உருவாக்கி உள்ளார். எனவே படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். மேலும் நஷ்ட ஈடாக 10 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக நடிகர் இயக்குனர் விஜய் ஆண்டனி தாக்கல் செய்த பதில் மனுவில், “ஆய்வுக்கூடம் படம் குறித்த எந்த தகவலும் எனக்கு தெரியாது. அந்த படத்தை நான் பார்த்தது கூட இல்லை. இந்த வழக்கு தொடரப்பட்ட பின்னரே அந்த படத்தை பார்த்தேன். இரு படங்களுக்கும் எவ்வித ஒற்றுமையும் இல்லை”
என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.சௌந்தர் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவில், பிச்சைக்காரன் 2 படத்தை வெளியிட விஜய் ஆண்டணிக்கு அனுமதி அளித்துள்ளதோடு, படத்தை வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் வருவாய் விவரங்களை ஆடிட்டர் சான்றிதழுடன் 60 நாட்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமெனவும்நடிகர் இயக்குனர் விஜய் ஆண்டனிக்கு உத்தரவிட்டுள்ளார்.