மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவாகும் ‘மார்கழி திங்கள்’!

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மஹால்’ திரைப்படத்தின் மூலம் அவரது மகன் மனோஜ் நடிகராக அறிமுகமானார்.

தொடர்ந்து ’அல்லி அர்ஜுனா’, ‘வருஷமெல்லாம் வசந்தம்’, ‘ஈரநிலம்’, ‘சமுத்திரம்’, ‘அன்னக்கொடி’ சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன் தனது வெண்ணிலா புரடக்சன் பட நிறுவனம் சார்பில் தயாரிக்கும் ‘மார்கழி திங்கள்’. படத்தின் மூலம் மனோஜ் இயக்குனராகவும் அறிமுகமாகிறார்.

இப்படத்தில் பாரதிராஜா முதன்மை வேடத்தில் நடிக்கிறார். இவருடன் வினோத் கிஷன், சம்யுக்தா விஸ்வநாதன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இந்த படம் அனைத்து வயதினரையும் கவர்ந்திழுக்கும் வகையில், காதல், செண்டிமெண்ட் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட கிராமத்து வாழ்வியலாக உருவாகிறது.இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார்.

ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவு செய்கிறார். கபிலன் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பழனி கணக்கன் பட்டியில் பூஜையுடன் தொடங்கியது.

இயக்குனர் சுசீந்திரன் வசனம் எழுதும் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை தேனி மற்றும் மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.