‘லைசென்ஸ்’. படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது இந்நிகழ்வில்தயாரிப்பாளர் என்.ஜீவானந்தம் பேசும்போது, “இந்த படத்தின் படப்பிடிப்பு ஐந்து மாதம் நடைபெற்றது. அந்த சமயத்தில் இயக்குனர் இப்படி பேசி நான் பார்த்ததில்லை. இன்று தான் இவ்வளவு பேசியுள்ளார்.
ஒரு தன்னம்பிக்கை பேச்சாளராக உலகம் முழுக்க சென்று பேசியுள்ளேன். ஆனால் இன்று நான் தயாரித்துள்ள படத்தின் விழா மேடையில் நின்று பேசுவது புதிதாக இருக்கிறது. இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பழ.கருப்பையா நடித்துள்ளார்
படப்பிடிப்பு சமயத்தில் என்னை தான் புதிதாக துவங்கிய கட்சியில் சேர்வதற்காக கூட அழைத்தார். இந்த படத்தில் நானும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். எனது தந்தை நாடக நடிகராக இருந்தவர்.. மூன்று படங்களில் நடித்துள்ளார்.. அவரை தொடர்ந்து நானும் சினிமாவிலேயே பயணிக்க துவங்கியுள்ளேன்.
இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ராஜலட்சுமி கூச்சம் இல்லாத நடிகை அவர் மிகப்பெரிய கூட்டங்களில் கலந்துகொண்டு அங்கு இருப்பவர்களை கையாளும் விதத்தைப் பார்த்து அவர் இந்த படத்தில் நடித்தால் சரியாக இருக்கும் என நான் ஒப்புக் கொண்டேன்.
அபி நட்சத்திரா நடித்திருக்கும் ஒரு காட்சி படமாக்கப்பட்டபோது நான் அழுதேன். நானும் அடிப்படையில் ஒரு கவிஞன் என்றாலும் இந்த படத்தில் பாடல் எதுவும் எழுதாமல் மூன்று பாடல்களையும் ரமணி காந்தனையே எழுத சொல்லிவிட்டேன். அவருக்கு சீக்கிரம் ரசிகர் கிளப்பும் ஆரம்பிக்க இருக்கிறேன்.
இந்த நிகழ்வில் எனது இரண்டாவது படம் குறித்து அறிவிப்பையும் வெளியிடுகிறேன். மன்னார்குடி பின்னணியில் கால்பந்தாட்ட கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு கோல் என்று டைட்டில் வைத்துள்ளோம்.
ஒரு கிராமம் எப்படி கால்பந்து விளையாட்டால் பிரிகிறது, பின் எப்படி கால்பந்து விளையாட்டால் ஒன்று சேர்கிறது என்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது.
ஏவிஎம் நிறுவனத்தின் 175வது படத்தை இயக்கிய குமரன் என்பவர் தான் இந்த படத்தை இயக்குகிறார்” என்று கூறி தனது அடுத்த படத்தின் இயக்குனர் குமரனையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.