மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘மாமன்னன்’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.
இந்த நிகழ்வில் கமல்ஹாசன், மாரிசெல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், எஸ்.ஜெ.சூர்யா.ஏ ஆர். முருக தாஸ் கவின் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, “மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முதன்முறையாக நடிக்கிறேன். சொல்லப்போனால் இது என்னுடைய கடைசி படம். வடிவேலு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பெரிய குழுவுடன் இந்தப்படம் அமைந்தது மகிழ்ச்சி. மாரி செல்வராஜ் படங்களில் நீங்கள் என்ன எதிர்பார்ப்பீர்களோ அது இந்தப் படத்திலும் இருக்கிறது.
படத்தை ஜூன் 29-ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளோம்.கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதாக இருந்தது. அமைச்சர் பொறுப்பு கொடுத்த பின்பும் நான் போய் படங்களில் நடித்து வந்தால் அது சரியாக இருக்காது. நிறைய வேலைகள் இருக்கிறது. பணிகள் இருக்கிறது. எதிர்பார்ப்பு கூடிக்கொண்டேயிருக்கிறது.
பல்வேறு பணிச்சுமைகளுக்கு இடையே தான் படத்தின் டப்பிங், இசை வெளியீட்டு விழாவுக்கு நேரம் ஒதுக்கியிருக்கிறேன். எனக்கு தெரிந்து இதுதான் கடைசி படமாக இருக்கும். நல்ல படமாக அமைந்தது திருப்தி. மாரி செல்வராஜின் அரசியல் இந்தப் படத்தில் அதிகமாக உள்ளது.. அடுத்த 3 வருடத்திற்கு படம் கிடையாது.
அதற்கு பின்பு தெரியவில்லை. அதை மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும். நானும் மாரியிடம் அடுத்து படம் நடித்தால் உங்களுடன் தான் நடிப்பேன் என வாக்குறுதி கொடுத்துள்ளேன்” இவ்வாறு அவர் கூறினார்.