காமராஜர் பிறந்தநாளில் உதயமாகும் ‘தளபதி விஜய் பயிலகம்’!

 

விஜய் தற்போது நடிப்பைத் தொடர்ந்து சமீபகாலமாக அரசியலிலும் கால் பாதிக்க திட்டமிட்டு தனது அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில், நடந்து முடிந்த கல்வி பரிசு நிகழ்வு அதை உறுதிப்படுத்தியுள்ளது.அதன் தொடர்ச்சியாக பனையூரில் 234 தொகுதி நிர்வாகிகள் உடன் ஆலோசனைக் கூட்டமும் நடத்தியுள்ளார்.அக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் காமராஜர் பிறந்த நாளில் விஜய் இரவு நேர பாடசாலை நடத்த ஆயத்தமாகும் படி நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், நடிகர் விஜய் தனது இரவு நேர பாடசாலை திட்டத்திற்கு ‘தளபதி விஜய் பயிலகம்’ என பெயர் சூட்டியுள்ளார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஜூலை 15ஆம் தேதி முதல் இந்த திட்டத்தை தொடங்க உள்ளனர் இது குறித்து விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,” பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அவரின் திருஉருவ சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அந்நாளில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகளை தங்களால் இயன்ற அளவில் செய்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை போற்றும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் “தளபதி விஜய் பயிலகம்’ ஆரம்பிக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.