தோனி என்டர்டெயின்மென்ட் சார்பில், சாக்ஷி சிங் தோனி தயாரித்துள்ள திரைப்படம், ‘எல்.ஜி. எம்.’ இதில், ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, ஶ்ரீநாத், வினோதினி, ஆர். ஜே. விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்தினை, இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி எழுதி, இயக்கி, இசையமைத்திருக்கிறார்.
எல்.ஜி. எம் திரைப்படத்தை, சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் சக்திவேலன் வெளியிட்டுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடயே வெளியாகியிருக்கும், எல்.ஜி. எம் எப்படி, இருக்கிறது?
ஒரே நிறுவனத்தில் வேலை செய்யும் காதலர்களான ஹரிஷ் கல்யாணும், இவானாவும் காதலித்து வருகின்றனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கின்றனர். இதற்கு இருவரது வீட்டிலும் சம்மதம் தெரிவிக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு இவானா தனிக்குடித்தனம் செய்ய விரும்புகிறார். ஹரீஷ் கல்யாண் இதை விரும்பவில்லை. இந்த கருத்து வேறுபாட்டினால் இருவரும் பிரிகின்றனர்.
சில நாட்கள் கழித்து இவானாவின் யோசனைப்படி, இரு வீட்டினரும் ஒரு ட்ரிப் போக திட்டமிடுகின்றனர். இந்த ட்ரிப்பில் ஹரிஷ் கல்யாணின் அம்மாவான நதியாவிடம் நல்லிணக்கம் ஏற்பட்டால், திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுக்கப்படுகிறது. இந்த ட்ரிப்பின் மூலம் காதல் ஜோடி சேர்ந்தனரா? இல்லையா? என்பது தான், எல்.ஜி. எம் (LGM – Let’s Get Married).
ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, ஆர் ஜே விஜய் இவர்களை சுற்றியே கதை நிகழ்கிறது. அதிலும் நதியாவுக்கும் இவானாக்குமான காட்சிகள் முக்கியமானவை. இந்த மாமியார் மருமகளுக்கு இடையே நிகழும் காட்சிகள் ரசனையானவை. இருவருமே சிறப்பான நடிப்பினை கொடுத்துள்ளனர். நடு நடுவே வினோதினி – ஶ்ரீநாத் ஜோடியும், ஆர்ஜே விஜயும் சேர்ந்து கொண்டு சிரிக்க வைக்கிறார்கள். இவர்களோடு யோகிபாபுவும் சிரிக்க வைக்கிறார். ஹரிஷ் கல்யாண், இவானா- நதியா இருவரிடமும் சிக்கித்தவிக்கும் காட்சி அவர் மீது பரிதாபம் ஏற்பட வைக்கிறது.
காலம் காலமாக எலியும், பூனையுமாக இருந்த மாமியார் மருமகள் காலம் மலையேறிவிட்டதை, நதியாவும் இவானாவும் நினைவு படுத்துகின்றனர். 2கே கிட்ஸ்கள் தற்போது தங்களது மாமியார்களுடன் ஜாலியாக சுற்றி வருவதை அழகாக பிரதிபலிக்கின்றனர். இவானா- நதியா இருவரும் நன்றாக நடித்துள்ளனர். இருவரும் ஒன்றாக ஊர் சுற்றும் காட்சிகள் சுவாரசியமானவை. க்ளைமாக்ஸில் புலியிடம் மாட்டிக்கொள்ளும் காட்சி, நம்பகத்தன்மை இல்லாவிட்டாலும், ஓகே… காட்சி தான்.
முதல் பாதி ஜாலியாகவும், சுவாரஸ்யமாகவும் செல்கிறது. இரண்டாம் பாதி சற்றே தொய்வு அதை சரி செய்திருக்கலாம்.
ஒவ்வொரு குடும்பத்திலும் முக்கியமான பிரச்சனையாக இருப்பது, மாமியார் மருமகள் பிரச்சனை தான். அதை முடிந்த அளவு சுவாரசியமாக சொல்லியிருக்கிறார், இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி. பிரச்சனைகளை புரிந்து கொண்டு விட்டுக்கொடுத்தால், எல்லாமே சுகம் தான்.
ஒளிப்பதிவாளர் விஸ்வஜித் காட்சிகளை அழகாக படமாக்கியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியும் ரிச்சாக இருக்கிறது.
இயக்குநர் ரமேஷ் தமிழ் மணியின் இசையில் பாடல்கள் கேட்கும்படியும், ரசிக்கும்படியும் இருக்கிறது. பின்னணி இசையும் கதைக்கு ஏற்றபடி.
மொத்தத்தில், எல்.ஜி. எம் படத்தினை பெண்கள் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்.













