பரத், வாணிபோஜனை பெண் பார்க்கச் செல்கிறார். இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப்போகிறது. ஆனால் வாணிபோஜனின் அப்பா ராதாரவிக்கு பரத்தை பிடிக்கவில்லை. வாணிபோஜனின் வற்புறுத்தலின் படி திருமணத்திற்கு சம்மதிக்கிறார். அதன் பிறகு, தொழில் நஷ்டம், இன்னொரு பெண்ணின் தொடர்பு, என பரத்தின் வாழ்க்கை செல்கிறது. சில வருடங்களில் இருவருக்குள்ளும் பிரச்சனைகள் உருவாகிறது.
ஒரு நாள், வழக்கம்போல் இவர்களுக்குள் ஏற்படும் சண்டையில், பரத் தாக்கியதில் வாணி போஜன் உயிரிழக்கிறார். அவரது பிணத்தை பரத் பாத்ரூமில் மறைத்து வைக்கிறார். அந்த நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக, பரத்தின் நண்பர்கள் விவேக் பிரசன்னாவும், டேனியல் அனி போப்பும் வீட்டிற்கு வருகிறார்கள். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான் லவ் படத்தின் கதை.
தொழில் நஷ்டம், மனைவிக்கு துரோகம் செய்யும் கணவனாக பரத் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். மன உளைச்சல் கொண்டவரின் உணர்வினை அழகாக பிரதிபலிக்கிறார். ராதாரவி பரத்தை திட்டி, அடிக்கும் காட்சியில், பரத் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.
வாணிபோஜன் அவரது கதாபாத்திரத்தை உணர்ந்து, நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். பரத்துடன் சண்டையிடும் காட்சிகளிலும், பிணமாக உட்கார்ந்த நிலையில், சிறப்பாக நடித்திருக்கிறார்.
ராதாரவி. ஸ்வயம் சித்தா இருவருமே ஒருசில காட்சிகளில் வந்தாலும் கவனம் பெறுகின்றனர்.
பரத்தின் நண்பர்களாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா, டேனியல் அனி போப் இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதிலும் விவேக் பிரசன்னாவின் நடிப்பு அட்டகாசம்.
லவ் படத்தினை இயக்கியிருக்கும் ஆர்.பி.பாலா, மலையாள லவ் படத்தில் அந்த இயக்குநர் செய்த அதே தவறுகளை செய்துள்ளார். எந்தவிதமான பரபரப்பும், விறுவிறுப்பும் இல்லமால் சொல்லியிருப்பது படத்தின் மிகப்பெரிய பலவீனம்.
பி.ஜி. முத்தையாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். காட்சிகல் அழகாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.
ரோனி ரெஃபலின் இசை ஒகே.
மொத்தத்தில், ‘லவ்’ சொல்வதற்கு ஒன்றுமில்லை!













