நடிகர் விஜய் அரசியலில் களமிறங்குவார் என கூறப்படும் நிலையில், விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர்கள் அணியினரின் ஆலோசனைக் கூட்டம் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு நடந்தது
இக்கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்தும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.இன்று மாலை வரை இக்கூட்டம் நடக்கிறது. இக் கூட்டத்தில் மாவட்ட வாரியாக உள்ள வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டதாகவும், மேலும் தமிழகம் முழுவதும் இலவச சட்ட உதவி மையம் தொடங்குவது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது..
நடிகர் விஜய் தற்போது வெளிநாட்டில் உள்ளதால் தமிழ்நாடு திரும்பிய பிறகு வழக்கறிஞர்களின் நிர்வாகிகள் பட்டியல் மற்றும் இலவச சட்ட உதவி மையம் குறித்தும் அறிவிக்கப்படும் என்கிறார்கள்.
இதையடுத்து அடுத்த கட்டமாக நாளை காலை 6 ஆம் தேதி கேரள ரசிகர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கூறியதாவது, விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு மக்கள் நல திட்டங்களை விஜய் ஆலோசனையின்படி சிறப்பான முறையில் செய்து வருகிறோம். ஏழை மாணவ -மாணவிகள் கல்வி பயில இரவு நேர பாடசாலை திட்டத்தை அறிமுகப்படுத்தி அதில் ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பயின்று வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் பயன்பெறுவதற்காக இலவச சட்ட உதவி மையம் மாவட்டம் தோறும் விரைவில் மக்கள் இயக்கம் மூலம் தொடங்க உள்ளோம். அடுத்த வாரம் சென்னை ஐகோர்ட் அருகில் இந்த மையத்தினை தொடங்குகிறோம்.
முதலில் மாவட்டம் வாரியாக தொடங்கி அடுத்த கட்டமாக தொகுதி வாரியாக இந்த சட்ட உதவி மையம் விரிவுபடுத்தப்படும். ஏழைகள் பொதுமக்களுக்கு முற்றிலும் இலவசமாக இந்த மையத்தின் மூலம் சட்ட ஆலோசனை வழங்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.