சிறந்த படங்ககளுக்கு தியேட்டர்கள் கிடைப்பது அரிதாகி வருகிற நிலையில் வெளியாகியுள்ள நல்ல படம் ‘நூடுல்ஸ்’
வித்தியாசமான படம். விறுவிருப்புக்கு குறைவில்லை.
விமர்சனத்தின் இறுதியில் சொல்ல வேண்டியதை முன்னதாகவே சொல்வதால் படத்தின் தன்மையை உணரமுடியும்.
வாரத்தின் கடைசி நாள் . சனிக் கிழமை இரவு.. ஹரீஷ் உத்தமனின் குடும்பத்துடன் இன்னொரு போர்சன் குடும்பமும் சேர்ந்து பெயர்களை கண்டுபிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். .
பக்கத்து வீட்டுக்காரனுக்கு எரிச்சல் .போலீசில் புகார் செய்ய ,ரோந்து சென்று கொண்டிருந்த இன்ஸ்பெக்டருக்கு தகவல் வருகிறது. ‘நல்ல’ போலீசாக அறிவுரை சொல்லப்போனவர்களை ஹரீஷ் உத்தமனும் ஷீலா ராஜ்குமாரும் சேர்ந்து ‘சட்டம்’ பேசி சீண்டி வைக்கிறார்கள்.
“புகாருடன் வாங்க . நாங்க ஸ்டேஷனுக்கு வர்றோம் ” என்கிற தெனாவெட்டான தொனி காவல் துறையை கடுப்பாக்கிவிடுகிறது.
“நல்ல சமயமடா நழுவ விடுவாயோ “என்பதைப் போல போலீசுக்கு ஒரு வாய்ப்பு.
அந்த வாய்ப்பு எப்படி வந்தது, ஹரீஷ் உத்தமன் குடும்பத்துக்கு ஏற்பட்ட திக் திக் நிகழ்வு என்ன ,எப்படி சால்வ் ஆகிறது என்பதே நூடுல்ஸ் . நுனியும் முடிவும் அறியாதபடி குழப்பமாக இருக்கிற உணவு நூடுல்ஸ் . பின்னலாகி கிடந்தாலும் சுவை தான்.! அடுத்தடுத்து பிரச்னைகள் ,அத்தனையுமே ரசனை ,என வாழ்ந்திருக்கிறார் இயக்குநர் ‘அருவி’ மதன்.இவரது முதல் படம்.
வாய் சவடால் விடுகிறவர்கள் சிக்கலை சந்திக்கிறபோது உள்ளாடையை நனைத்துக் கொள்வர். அப்படி ஒரு பிரபலம்தான் இந்த கதையின் வக்கீல் . உதார் பேர்வழி.சிரிக்காமல் இருக்க முடியாது . நல்ல படைப்பு. ஊருக்குள்ள ரொம்ப பேர் இப்படி இருக்கான்.!ஆனால் இப்படியெல்லாமா வக்கீல் இருப்பார் என்று கேட்பது நிழலுடன் போரிடுவதைப் போலாகிவிடும். ஏன்னா கதையின் தன்மை காமடி !
ஹரீஷ் உத்தமன் சிறப்பாக நடித்திருக்கிறார் . வில்லன் லுக்கில் நடித்து வந்தவரை பயந்தாம் கோழியாக பார்ப்பதும் ஒரு சுகம்தான்.
ஷீலா ராஜ்குமார் இன்னசன்ட் .அதுவே எரிச்சலை தரவேண்டும் என்பது போல காட்சி அமைப்புகள். சிறப்புடன் செய்திருக்கிறார்.
ஒலிப்பதிவு வினோத்,இசை ராபர்ட் சற்குணம். கத்திரி சரத்குமார் . மூன்று கில்லாடிகள்.!
இயக்குநர் மதன் தான் இன்ஸ்பெக்டர் . நடிப்பு ,டைரக்ஷன் என இரு பொறுப்புகளையும் சிறப்பாக செய்திருக்கிறார்.
ஆனால் நூடுல்சை விற்பனை செய்கிற பெரும் பொறுப்பு சுரேஷ் காமாட்சிக்கு.!ஆதரவு தந்தால் இன்னும் நல்ல படம் நாலு வரும்.