வன்முறையை கொண்டாடாமல், அன்பு மற்றும் காதலை நகைச்சுவை உணர்வோடு உயர்த்திப் பிடிக்கும் திரைப்படமான ‘இனி ஒரு காதல் செய்வோம்’ இப்படம் வரும் நவம்பர் 3 அன்று வெளியாக உள்ளது. எபிக் தியேட்டர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை ஹரிஹரன் இயக்கியுள்ளார். அஜய் பால கிருஷ்ணா மற்றும் ஸ்வேதா ஷ்ரிம்ப்டன் முதன்மை வேடங்களில் நடித்துள்ள இப்படத்தின் அனைத்து வேலைகளும் நிறைவடைந்துள்ளன.
இப்படம் குறித்து இயக்குநர் ஹரிஹரன் கூறும் போது, “இனி ஒரு காதல் செய்வோம் திரைப்படத்தில் சண்டைக் காட்சிகளே இல்லை. மேலும் வில்லன் கதாபாத்திரமும் இல்லை. சூழ்நிலைகள் எவ்வாறு மக்களை நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் சித்தரிக்கின்றன, மேலும் சூழ்நிலைகளின் அடிப்படையில் ஒருவரை பற்றிய மற்றொருவரின் கருத்து எவ்வாறு மாறுகிறது என்பதை சுவாரசியமான முறையில் இப்படம் எடுத்துரைக்கிறது,” என்றார்.
நகைச்சுவை ததும்பும் காதல் திரைப்படமான ‘இனி ஒரு காதல் செய்வோம்’, 90ஸ் கிட்ஸ் எனப்படும் 1990களில் பிறந்தவர்களின் நட்பு, காதல் மற்றும் பிரிவு ஆகியவற்றை திரையில் காட்டுகிறது. அஜய் பால கிருஷ்ணா கதாநாயகனாக அறிமுகமாகும் நிலையில், ஜீ தமிழ் மற்றும் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த ஸ்வேதா ஷ்ரிம்ப்டன் கதாநாயகியாக நடிக்கிறார். தம்பி ராமையா மற்றும் சமுத்திரக்கனியின் அடுத்த படத்திலும் அவர் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர்கள் வர்கீஸ் மேத்யூ, மனு பார்த்திபன், கிஷோர் ராஜ்குமார், விக்னேஷ் சண்முகம், திடியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்திற்கான பாடல்களை ரேவா இசையமைக்க, பின்னணி இசையை கெவின் டி கோஸ்டா அமைத்துள்ளார்.கோபிநாத் சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சென்னை, கிழக்கு கடற்கரை சாலை, புதுச்சேரி, பெங்களூரு, கொடைக்கானல் மற்றும் பல இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.