சிவாஜி கணேசன் 96 வது பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

தமிழ்நாடு அரசு சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 96வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சென்னை அடையாறு பகுதியில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் அவரது ரசிகர்கள், பொதுமக்கள் அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,இன்று காலை சிவாஜி கணேசனின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள சிவாஜி கணேசனின் புகைப்படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அமைச்சர்கள் துரைமுருகன், சாமிநாதன், மேயர் பிரியா, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும், நடிகர்கள் ராம்குமார்,பிரபு, அவரது மகன் விக்ரம் பிரபு, மற்றும் நடிகர் நாசர் நிழல்கள் ரவி,சந்தானபாரதி,பூச்சி முருகன் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டரில் பக்கத்தில், “முத்தமிழறிஞர் கலைஞரின் கனல் தெறிக்கும் வசனங்களை அனல் பறக்கத் தமது சிம்மக் குரலால் பேசி, ரசிக நெஞ்சங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்த “நடிகர் திலகம்” அவர்களின் 96-ஆவது பிறந்தநாள் இன்று. நடிப்பின் இமயமாய், தமிழர்களின் கம்பீரமான கலையுலக அடையாளமாய் என்றென்றும் உயர்ந்து நிற்கும் “நடிகர் திலகம்” சிவாஜி கணேசன் அவர்களின் புகழ், தரணியும், தமிழும் உள்ளவரை என்றென்றும் நிலைத்திருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்