யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை பரிசளித்த ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று மாலை நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் ‘இறுகப்பற்று’ படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் நடிகர் விதார்த் பேசும்போது, “மைனா படம் ரிலீஸான போது உங்களை எல்லாம் சந்தித்து அந்த வெற்றியை பகிர்ந்து கொண்டேன். அதன்பிறகு நான் நடித்த ஒவ்வொரு படத்திற்கும் அதன் தயாரிப்பாளரே வந்து இது வெற்றிப்படம் என சொல்வார்கள் என எதிர்பார்த்தேன். 13 வருடம் கழித்து இந்த படத்தில் அது நடந்திருக்கிறது. படம் வெளியான பிறகு தொடர்ந்து நிறைய தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. ஒவ்வொரு அழைப்பையும் பேசி முடிக்க ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. ” என்று கூறினார்.
நடிகர் விக்ரம் பிரபு பேசும்போது, “இறுகப்பற்று படம் ரிலீஸான அக்டோபர் 6ஆம் தேதி தான் என் மனைவியின் பிறந்தநாள் என்பதால் அவருக்காக இதை டெடிகேட் பண்ணுவதாக கூறினேன். டெடிக்கேட்டும் பண்ணிவிட்டேன். அப்போது என்னிடம்,
நீங்களும் கிட்டத்தட்ட படத்தில் பார்த்த கதாபாத்திரம் போல தான் இருக்கிறீர்கள் என்று கூறினார். எந்த ஊருக்கு போனாலும் அங்கே உள்ள வீடுகளில் என்னுடைய தாத்தா படம் இருக்கும். இறுகப்பற்று படமும் அப்படிப்பட்ட இடங்களுக்கு எல்லாம் போய் சேர்ந்திருக்கிறது என்பது மகிழ்ச்சி. ” என்றார்.
இயக்குனர் யுவராஜ் தயாளன் பேசும்போது, “அக்-3ஆம் தேதி பத்திரிகையாளர் காட்சி முடிந்த அன்று இரவு தான் நிம்மதியாக தூங்கினேன். அதுவரை எங்கள் படமாக இருந்தது. அதன்பிறகு உங்கள் படமாக எடுத்து மக்களிடம் கொண்டு போய் சேர்த்தீர்கள். ஒரு படம் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது, சூப்பர் என்று சொல்வார்கள். ஆனால் முதன்முறையாக நன்றி என சொல்வது எனக்கு புதிதாக இருந்தது.
விக்ரம் பிரபு நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நிறைய பேர் தயங்கினார்கள். காரணம் இது மல்டி ஸ்டாரர் படமாக இருந்தது. அது மட்டுமல்ல ஹீரோயினை மையப்படுத்திய படமாகவும் இருப்பதாக அவர்கள் நினைத்தார்கள். ஆனால் விக்ரம் பிரபு இந்த படத்தில் நடிக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என்று கூறி ஒப்புக்கொண்டார். அவரும் ஷ்ரத்தாவும் நடிக்க வேண்டிய ஏழு நிமிட காட்சியை ஒரே ஷாட்டில் படமாக்கினோம். விக்ரம் பிரபு நடிக்க ஆரம்பித்ததுமே அதை மீண்டும் ஒருமுறை படமாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆனால் அவர் நடித்து முடித்ததும் சுற்றி இருந்தவர்கள் பலமாக கைதட்டி பாராட்டினார்கள்.
அவருக்கும் எனக்கும் சிறுவயதில் இருந்தே ஒரு தொடர்பு இருக்கிறது. என்னுடைய தந்தை தீவிரமான சிவாஜி ரசிகர். சிறுவயதில் சிவாஜியின் படத்தைக் காட்டி இவர்தான் உன்னுடைய தாத்தா என்று சொல்வார். நானும் அவரையே என்னுடைய தாத்தா என்று எல்லோரிடமும் கூறுவேன். பள்ளி தலைமை ஆசிரியரே என் தந்தையை அழைத்து விசாரிக்கும் அளவிற்கு சிவாஜி தான் என் தாத்தா என நம்பினேன். அதன்பிறகு அவர் என் தாத்தா இல்லை என சொன்னதும் அழுதுவிட்டேன். சிவாஜியை பார்த்து வளர்ந்த குடும்பம் எங்களுடையது. சிவாஜி இறந்த அன்று இரவு என் தந்தை ரொம்பவே அழுதார்.” என்று கூறினார்.
தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு பேசும்போது, “இப்படத்தின் ரிலீஸுக்கு முன்பு ஒரு சின்ன தயக்கம் இருந்தது. வழக்கமாக பெரிய படங்களை எடுக்கும்போது ஓடுமா ஓடாதா என யோசிக்காமல் படத்தை எடுப்போம். ஆனால் யாராவது சின்ன படம் எடுக்கிறேன் என என்னிடம் சொன்னால் நல்ல படமாக எடுங்கள் என்று சொல்வேன். அப்போது என் மீது பலரும் கோபப்படுவார்கள். ஆனால் கொரோனா தாக்கத்திற்கு பிறகு நிலைமை எல்லாமே மாறியது. சின்ன பட்ஜெட்டில் அதுவும் நான்கு கோடிக்குள் படம் எடுத்தால் மக்கள் ஆதரவு கிடைக்குமா என சந்தேகம் ஏற்பட்டது. காரணம் ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து சிறிய படங்களை பார்ப்பது குறைந்துவிட்டது. த்ரில்லர் படம் என்றால் கூட இளைஞர்கள் படம் பார்க்க வருவார்கள். அவர்கள் மூலமாக படம் பற்றி வெளியே பரவிவிடும். ஆனால் குடும்ப படத்திற்கு அப்படி வருவார்களா என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால் நல்ல கதை என்றால் தைரியமாக சின்ன பட்ஜெட் படங்களை எடுக்கலாம் என்கிற நம்பிக்கையை இறுகப்பற்று படத்திற்கு கிடைத்த வெற்றி மூலம் மக்கள் கொடுத்து இருக்கிறார்கள்.. அதற்காகத்தான் இந்த நன்றி தெரிவிக்கும் சந்திப்பு” என்றார்.