படித்த சமூகத்தை ‘மடைமாற்றி’ விட்டனர்! இயக்குனர் அமீர் ‘கடும்’காட்டம்!!
இயக்குனர் அமீர் சென்னை மைலாப்பூரில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்னன் சாலையில் “The Law Cafe” என்ற தனது இரண்டாவது உணவகத்தை திறந்துள்ளார்.
இதன் திறப்பு விழாவிற்கு பிரபல நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வாழ்த்து தெரிவித்ததோடு, ரிப்பன் வெட்டி உணவகத்தை திறந்து வைத்தார். தற்போது மகாராஜா என்ற படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி, மெல்லிய மீசையோடு வித்யாசமான கெட்டப்பில் வந்து அசத்தியுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.
இந்நிகழ்ச்சியின் போது செய்தியாளர்கள் சினிமா நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த அவர், கலைஞர்கள் எப்போதும் மக்களுக்கானவர்கள், அவர்களை மக்களிடம் இருந்து பிரிக்கவே முடியாது. மக்களிடம் இருந்து கலை, அரசியல், பண்பாட்டை பிரிக்கவே முடியாது. அரசியல் பேசலாம், ஆனால் மக்களுக்கான அரசியல் பேச வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் ஆட்டமிழந்து சென்ற போது, ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமீர், ஒரு படித்த சமூகத்தை, கடந்த 10 ஆண்டுகளாக என்ன மாதிரியாக மடைமாற்றி வைத்து இருக்கிறார்கள் என்பதன் வெளிப்பாடுதான் அந்த கோஷம். அங்கு இருந்தவர்கள் படிக்காதவர்களோ, பாமர மக்களோ இல்லை.
அங்கு இருந்த அனைவரும் மேல்தட்டு மக்கள். அவர்களின் மூளைக்குள் என்ன சொருகப்பட்டு இருக்கிறது என்பதன் வெளிப்பாடு தான் இந்த கோஷம்.இந்தியன் கிரிக்கெட் என்பது இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது அல்ல, அது ஒரு கிரிக்கெட் வாரியம். பாகிஸ்தான் கிரிக்கெட் என்பது பாகிஸ்தான் அரசாங்கத்தால், உருவாக்கப்பட்டது அல்ல
அது ஒரு கிரிக்கெட் வாரியம். அவர்கள் அந்த நாட்டைச் சேர்ந்தது தானே தவிர, நாடு வீரர்களை உருவாக்கவில்லை. அது ஒரு தனியார் நிறுவனம் உருவாக்கியது, அது முழுக்க முழுக்க வர்த்தகம். வர்த்தகத்தில் போய் நீங்கள் தேசப்பற்றை காட்டினீர்கள் என்றால், உங்கள் அறியாமையை நினைத்து வருத்தப்படுகிறேன். விளையாட்டை விளையாட்டாக பாருங்கள் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.