ஸ்ரீனி குப்பலா தயாரிப்பில் விக்ராந்த் ருத்ரா எழுத்து மற்றும் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படமான ‘அர்ஜுன் சக்ரவர்த்தி, ஜர்னி ஆஃப் எ அன்சாங் சாம்பியன்’ முதல் பார்வை (ஃபர்ஸ்ட் லுக்) வெளியாகி உள்ளது.விஜய ராமராஜு மற்றும் சிஜா ரோஸ் முதன்மை வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் அஜய், தயானந்த் ரெட்டி, அஜய் கோஷ் மற்றும் துர்கேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் தோன்றுகின்றனர்.
‘அர்ஜுன் சக்ரவர்த்தி’ திரைப்படம் 1980களில் இந்தியாவுக்காக விளையாடிய கபடி வீரரின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்கள் மற்றும் வெற்றிகளை திரையில் காட்டும் படமாக இது அமையும்.இப்படத்தின் ஒளிப்பதிவை ஜெகதீஷ் சீக்கட்டிகவனிக்க,விக்னேஷ் பாஸ்கரன் இசையமைத்து வருகிறார்.தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு பான்-இந்தியா படமாக வெளியாக உள்ளது.
தயாரிப்பாளர் ஸ்ரீனி குப்பலாகூறுகையில், , “இது ஒரு திரைப்படமாக மட்டுமில்லாமல், சவால்களை தாண்டி நம் அனைவரையும் ஊக்குவிக்கும் மனிதர்களின் அசைக்க முடியாத மன உறுதிக்கான எடுத்துக்காட்டாக அமையும். கனவை நனவாக்க முழு மூச்சாக உழைத்தால் இலக்கை எட்டிவிடலாம் என்பதை இப்படம் வெளிப்படுத்தும்,” என்றார்.
இயக்குநர் விக்ராந்த் ருத்ரா கூறுகையில், “‘அர்ஜுன் சக்ரவர்த்தி: ஜர்னி ஆஃப் அன்சாங் சாம்பியன்’ படத்தை இயக்கியது பெருமையாக உள்ளது. அர்ஜுன் சக்கரவர்த்தியின் கதையை திரையில் உயிர்ப்பிக்கும் பயணம் சவாலாக இருந்தது. அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றிலிருந்து வெற்றி பிறக்கிறது என்ற பழமொழிக்கு அர்ஜுன் சக்ரவர்த்தியின் வாழ்க்கை ஒரு சான்றாகும். எங்களின் ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் புரிந்து கொண்டு பகிர்ந்து கொள்ளும் திறமையான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி,” என்கிறார்.