ஹீரோ யார் வில்லன் யார் என்று தெரியாத கதை: ‘தரைப்படை’!
ஸ்டோனக்ஸ் நிறுவனத்தின் சார்பில் பி.பி. வேல்முருகன் தயாரித்துள்ள புதிய படம்,’தரைப்படை ‘.பான் இந்திய படமாக உருவாகியுள்ள இப்படத்தில், ஜீவா , பிரஜின், விஜய் விஷ்வா என்று மூன்று கதாநாயகர்கள் நடித்துள்ளனர்.இவர்களுக்கு ஜோடியாக மூன்று புதுமுகங்கள் கதாநாயகிகளாக அறிமுகமாகின்றனர்.
இப்படத்தை இயக்கியுள்ள ராம்பிரபா கூறுகையில்,”ஒரு படத்தின் கதை தொடங்கியவுடன் அந்த படத்தின் கதாநாயகன் யார்? வில்லன் யார்? என்று தெரிந்துவிடும் . ஆனால் ஒரு கதையில் யார் கதாநாயகன், யார் வில்லன் என்று தெரியாத வகையில் அந்தந்த கதாபாத்திரத்தின் கறுப்பு வெள்ளைப் பக்கங்களைப் புரட்டிக் காட்டப்படுகின்றன . ரசிகர்களுக்கு யார் நேர்நிலை நாயகன்? யார் எதிர்மறை நாயகன் ? என்று புரியாது.அப்படி ஒரு கதையாக எடுத்து உருவாகி இருக்கும் படம் தான் ‘தரைப்படை’ .
இது ஒரு கேங்ஸ்டர் சம்பந்தமான கதை.மல்டி லெவல் மார்க்கெட்டிங் எனப்படும் சங்கிலித் தொடர் சந்தைப்படுத்துதல் மூலம் ஒரு மோசடிக் கும்பல் மக்கள் பணத்தை அபகரிக்கிறது. அந்தக் கும்பலிடமிருந்து இந்த கேங்ஸ்டர் கும்பல் அந்தப் பணத்தைக் கைப்பற்றுகிறது. இப்படி அந்தப் பணம் மாறி மாறி மனிதர்களிடம் போய்க் கொண்டிருக்கிறது. இறுதியில் எங்கே செல்லும் என்று சொல்ல முடியாத அளவிற்குப் பயணம் நிகழ்கிறது.
படத்தின் கதையையும் காட்சிகளையும் பார்க்கும் போது யார் நல்லவன் ? யார் கெட்டவன்? என்று தெரியாத வகையில் விறுவிறுப்புடன் உருவாகி இருக்கும் படம் தான், ‘தரைப்படை’ .இப்படத்துக்காக பிரமாண்ட ‘ஏர்போர்ட் செட்’ போடப்பட்டு அதில் பல முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.என்கிறார்.