கவிஞர் வைரமுத்துவின் ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா! முக. ஸ்டாலின் வெளியிடுகிறார்!!
வரும் ஜனவரி 1 ஆம் தேதி சென்னையில் காமராசர் அரங்கில் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ‘மகா கவிதை’ நூலை வெளியிடுகிறார். நூலின் முதற்படியை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக் கொள்கிறார்.
மக்கள் நீதி மய்யக்கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை இருவரும் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.தொடர்ந்து கவிஞர் வைரமுத்து ஏற்புரை ஆற்றுகிறார்
இது குறித்து கவிஞர் வைரமுத்து கூறுகையில்,‘மகா கவிதை’ என்பது நிலம், – நீர், – காற்று, தீ, வெளி என்ற ஐம்பூதங்கள் பற்றிய ஐந்து நெடுங் கவிதைகளின் பெருந்தொகுப்பு ஆகும். கவிப்பேரரசு வைரமுத்துவின் 30 மாதக் கடும் உழைப்பினால் உருவானது இந்தக் கவிதைநூல்.“அகவியல் – புற வியல் – அறவியல் -இறையியல் என்றெல்லாம் பேசிய தமிழ்க்கவிதை முதன்முதலில் முழுக்க அறிவியல் பேசுகிறது.
ஐம்பூதங்களின் அறிவியலும் ஈராயிரமாண்டு நீண்டு கிடக்கும் தமிழ்க் கவிதையின் அழகியலும் ஒருங்கிணைந்த பெருங்கவிதை மகா கவிதை. இளைய தலைமுறையின் எதிர்காலத்திற்கு இந்த மகா கவிதை விஞ்ஞான வாசலைத் திறந்துவிடும்”இவ்வாறு அவர் கூறினார்
மகா கவிதை என்ற தலைப்பின் ஐந்து எழுத்துக்களிலும் இந்த நூலின் ஐந்து உள்ளடக்கங்கள் மறைந்திருக்கின்றன. அவற்றைக் கண்டுபிடித்துச் சரியான விடை சொல்பவர்க்கு ஐந்து லட்சம் பரிசு என கவிஞர் வைரமுத்து ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில்,அப் போட்டியில் வெற்றிபெற்றவர்கள் மேடையிலேயே அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு முதலமைச்சர் பரிசுகளை வழங்குவார். இந்நூலை .கவிஞர் வைரமுத்துவின் பதிப்பகமான ‘சூர்யா இலக்கியம்’ வெளியிடுகிறது. வெற்றித் தமிழர் பேரவை இவ் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.