’சிங்கப்பூர் சலூன்’ டிரெய்லர் வெளியீட்டு விழா!

 

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல், ஐசரி கணேஷ் தயாரிப்பில், கோகுல் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி, சத்யராஜ், மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தப் படம் ஜனவரி 25 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது, “சரியான மனிதரிடத்தில் இருந்தால் நமக்கும் சரியான விஷயங்கள் நடக்கும். அப்படி எம்.ஜி.ஆரிடம் இருந்த நல்ல குணங்கள் ஐசரி வேலனுக்கும் அவருடைய மகன் ஐசரி கணேஷூக்கும் வந்திருக்கிறது. வாழ்த்துகள். 45 வருடங்கள் சினிமாவில் இருக்கிறேன் என்றால் சலூனுடைய முக்கியத்துவம் என்ன என்பது எனக்குத் தெரியும். ஹேர்ஸ்டைல் என்பது வாழ்க்கையில் முக்கியமான விஷயம். எம்.ஜி.ஆர். சினிமாவில் இருந்தபோது ஒரு ஹேர்ஸ்டைலிலும் பொது வாழ்க்கைக்கு வந்தபோது வேறொரு லுக்கிலும் இருந்தார். அதுபோலதான் ரஜினிகாந்த், விஜயகாந்தும். இப்படி எல்லோருடைய வாழ்க்கையிலும் முக்கியமான, ஹேர்ஸ்டைலை வைத்து படம் எடுப்பது நல்ல விஷயம். சினிமாவில் ஹீரோவுக்கு வெற்றிகள் வர வர அடுத்தடுத்தப் படங்களில் பட்ஜெட்டை ஏற்றினால் மட்டுமே வேறொரு தளத்திற்குப் போக முடியும். ’எல்.கே.ஜி.’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘ரன் பேபி ரன்’ இப்போது ‘சிங்கப்பூர் சலூன்’ என பாலாஜியின் படங்களின் பட்ஜெட் அடுத்தடுத்து அதிகமாகிக் கொண்டேப் போகிறது. குறிப்பாக, இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் அவ்வளவு கிராஃபிக்ஸ் பணிகள் இருக்கிறது. சிறப்பான சிஜி பணிகளுக்கு தயாரிப்பாளர் பணம் தர வேண்டும். ஒவ்வொரு ஹீரோவுக்கும் எவ்வளவு பணம் செலவழிக்க வேண்டும் என தயாரிப்பாளருக்கு ஒரு மைண்ட்செட் இருக்கும். அதைத்தாண்டி அவர் செலவழிக்கிறார் என்றால் அந்தப் படத்தின் மீது அவருக்கு இருக்கும் நம்பிக்கைதான் அதற்குக் காரணம். இதற்கு முன்பு கவுண்டமணி, மணிவண்ணன், வடிவேலு இவர்களுடன் சேர்ந்துதான் காமெடி செய்திருக்கிறேன். ஆனால், நானே ஒத்தைக்கு ஒத்தையாக நின்று காமெடி செய்தது இந்தப் படத்தில்தான். திருவிளையாடல் நாகேஷ் போல, ‘தனியா நடிக்க வச்சுட்டானே’ என்றுதான் நடித்தேன். இயக்குநர் கோகுலின் அந்த தைரியத்திற்கு நன்றி. வில்லன் ரோல் நடித்துவிட்டு கெஸ்ட் ரோல் நடிக்க வேண்டும் என்றால் யோசிப்பேன். ஆனால், அந்த தைரியத்தை விஜய்சேதுபதி எனக்குக் கொடுத்தார். அவருக்கு ‘மக்கள் செல்வன்’ பட்டம் பொருத்தமானது. நான் முதல் படத்தில் நடித்ததைப் போல இந்த சிங்கப்பூர் சலூனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். ஏனெனில், காமெடி நடிகர் என எனக்கு இன்னொரு கதவு திறக்கப்படும்” என்றார்.
நடிகர் ஜான் விஜய், “இந்தப் படத்தில் வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் கோகுல், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சாருக்கு நன்றி. நானும் ரேடியோவில் இருந்திருக்கிறேன். நான் பார்த்தது வரையில் இன்றைய தேதியில் டிரெண்டியான ஆர்.ஜே. பாலாஜிதான். சினிமாவிலும் எண்டர்டெயின்மெண்ட்டோடு நல்ல மெசேஜும் சொல்வார். கோகுலும் திறமையான இயக்குநர். சலூன் கடைக்காரர்களுக்கு புது ஸ்டைல் இந்தப் படம் கொடுக்கும்”.

நடிகர் விஜய்சேதுபதி, “படத்தின் டிரெய்லர் பார்த்தேன். அருமையாக இருந்தது. அதை விட சூப்பராக ‘சிங்கப்பூர் சலூன்’ என்ற டைட்டில் இருக்கிறது. பாலாஜியைத் திரையில் பார்க்க நன்றாக இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு நானும் பாலாஜியும் மொட்ட மாடியில் ஒரு மணி நேரம் தம் அடித்துக் கொண்டே பல கதைகள் பேசியுள்ளோம். அவருடைய வளர்ச்சி, அவர் தைரியமாக கருத்துகளைப் பேசும் விதம் எல்லாவற்றையும் ரசிக்கிறேன். கோகுல் கொஞ்சம் டார்ச்சர்தான். ஆனால், திறமையான இயக்குநர். அவருடன் வேலைப் பார்த்த இரண்டு படங்களும் மிகச்சிறந்த அனுபவம். இதைவிட மிகப்பெரிய மேஜிக் படங்களில் செய்வார். சத்யராஜ் சாரின் நடிப்பைத் திரையில் பார்ப்பதே அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். அவருடைய எந்தப் படத்தையும் பார்ப்பது சிறந்த அனுபவம். அவருடன் சரிக்கு சமமாக நடிக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டாக அது இருக்க வேண்டும்”.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், ”இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கும் விஜய்சேதுபதி சார் ஒரு கோரிக்கை வைத்தார். அதாவது, சத்யராஜ் சாருடன் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் நடிக்க வேண்டும் என்று. கோகுல் சாரிடம் அப்படி ஒரு கதை இருந்தால் நான் படத்தைத் தயாரிக்க ரெடி. ’சிங்கப்பூர் சலூன்’ படத்தின் ரிலீஸ் தேதி என்னவோ ஜனவரி 25தான். ஆனால், அதற்கு முன்பு எங்கள் தயாரிப்பில் கோகுலுடைய அடுத்தப் படம் ரெடியாகி விட்டது. உங்களைப் போலவே, நானும் படத்தைத் திரையரங்குகளில் பார்க்க ஆவலாக உள்ளேன். நான் தனியாக நிறைய முறை பார்த்துவிட்டேன். நான் எடுத்தப் படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தப் படம் இது. ஆர்.ஜே. பாலாஜி இதில் வேற பாலாஜியாக அருமையாக நடித்திருக்கிறார். சத்யராஜ் சார் வேற லெவலில் நடித்திருக்கிறார். சிறப்பாக நகைச்சுவை வந்துள்ளது. படம் பிடித்துப் போய் ரெட் ஜெயண்ட்ஸ் விநியோகம் செய்துள்ளது. சேட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சி எடுத்திருக்கிறது. அவர்களுக்கு நன்றி. படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக வேலை செய்துள்ளனர். படம் உங்களுக்கும் பிடிக்கும். விழாவிற்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி!”.

நடிகர் ஆர்.ஜே. பாலாஜி, “இந்தப் படத்திற்காக வந்து சிறப்பித்த பெரிய மனிதர்கள் அனைவருக்கும் நன்றி. தலைவாசல் விஜய் சார், ரோபோ ஷங்கர் சார் என அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். அடுத்து யங் ஹீரோவாக மாறப்போகும் கிஷன் தாஸ், எங்கள் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டதற்கு நன்றி. இப்போது அவர் மூன்று படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். எனக்கு ஜோடியாக நடித்துள்ள மீனாட்சி செளத்ரி புரோமோஷனுக்கு நேரம் தர முடியாத அளவிற்கு பிஸியாக இருக்கிறார். ஆமாம், இப்போது அவர் விஜய் சாருக்கு ஜோடி. இன்னொரு ஹீரோயினும் இருக்கிறார். சில காரணங்களால் அவராலும் வர முடியவில்லை. நட்புக்காக நடித்துக் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஜீவா சாருக்கு நன்றி. இவர்கள் தவிர இன்னொரு பெரிய நடிகர் முக்கியமான ஒரு கதாபாத்திரம் நடித்துள்ளார். அதை இப்போது நாங்கள் சொல்லவில்லை. ஒரு ரூபாய் கூட தராமல் அவர் எங்களுக்கு நடித்துக் கொடுத்ததற்கு நன்றி. படத்திற்கு சிறப்பாக உழைத்துக் கொடுத்த படக்குழுவினருக்கு நன்றி. இயக்குநர் கோகுல் கூட வேலைப் பார்ப்பது சிரமம் என விஜய்சேதுபதி சொன்னார். நாங்கள் அடித்துக் கொண்டோம் என சில செய்திகள் எல்லாம் பார்த்தேன். அப்படி எல்லாம் இல்லை. கோகுலுடன் வேலைப் பார்ப்பது கஷ்டம்தான். ஏனெனில், அவருடைய கதாபாத்திரத்திற்கு நான் எதிராக இருந்தேன். ஆரம்பத்தில் நிறைய விவாதித்தோம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாகதான் அவருடைய கதைக்கு செட் ஆனேன். இந்தப் பயணம் கடினமாகதான் இருந்தது. ஆனால், ஆர்வத்துடனும் மறக்க முடியாத ஒன்றாகவும் இருந்தது. அடுத்தப் படத்தில் நான் சிறப்பாக நடிக்க இவருடன் வேலைப் பார்த்ததும் முக்கியக் காரணம். இந்தக் கதை மீது நான் வைத்த நம்பிக்கையை ஐசரி கணேஷ் சாரும் வைத்திருந்தார். படத்தில் சலூன் செட் போடவே ஒன்றரை கோடி ஆனது. இதற்கெல்லாம் ஆதரவு கொடுத்த ஐசரி சாருக்கு நன்றி. ரெட் ஜெயண்ட்ஸ் நல்ல படங்களை மட்டுமேதான் வாங்கும். அப்படித்தான் இந்தக் கதையும் பிடித்துப் போய் வாங்கினார்கள். இந்த வேலை இவர்கள் மட்டும்தான் செய்வார்கள் என்ற ஜாதி மனப்பான்மையை உடைத்து உலகம் எவ்வளவோ தூரம் முன்னேறி விட்டது. எந்த வேலையை யார் பிடித்து செய்தாலும் முன்னேறிக் கொண்டே போகலாம் என்பதுதான் இதன் அடிநாதம். நிறைய பேருக்கு கனெக்ட் ஆகும் என ஆசையாக செய்த படம் இது. பிடிச்ச விஷயம் செய்யும் முன்பு நன்றாகப் படித்து விடுங்கள். அது ரொம்ப முக்கியம். படம் ஜனவரி 25 அன்று வெளியாகிறது. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.