தமிழ்த் திரையுலகில் சிறப்பான திட்டமிடுதலுடன் காலடி எடுத்து வைக்கும் சனா ஸ்டுடியோஸ் வழங்கும், மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கும் ’புரொடக்ஷன் நம்பர்.1’ படத்தை கோலிவுட்டின் பிரபல திரைப்பட இயக்குநர்கள் 4 பேர் தொடங்கி வைத்தனர்.
இயக்குநர்-அரசியல்வாதி சீமான், சரண், அருண்ராஜா காமராஜ் மற்றும் கல்யாண் உள்ளிட்ட கோலிவுட்டின் மிகவும் பிரபலமான திரைப்பட இயக்குநர்கள் நான்கு பேர் சனா ஸ்டுடியோஸின் முதல் தயாரிப்பைத் தொடங்கி வைத்துள்ளனர். பிரமாண்டமாக பூஜையோடு தொடங்கிய இந்த விழாவில் படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இதற்கு முன்பு ஸ்ரீகாந்த் நடித்த ’எக்கோ’ படத்தை இயக்கிய நவின் கணேஷ் இயக்கும், இன்னும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படம் சர்வைவல் த்ரில்லராக உருவாக இருக்கிறது. முத்து, சந்தோஷ் சிவன் & ரவி இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்க, ஜீவிதா இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் சார்லி, கும்கி அஸ்வின்
கலக்கப்போவது யாரு புகழ் சரத் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ்-க்கு இசை ஏற்பாட்டாளராக இருந்த (arranger) அபிஷேக் ஏஆர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இதற்கு முன்பு அவரது இசையில் உருவான ‘கேம் ஆன்’ ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது. இந்த படத்திற்கு ரவிவர்மா ஒளிப்பதிவு செய்கிறார். அவருடைய ஒளிப்பதிவில் சமீபத்தில் வெளியான ‘தூக்குதுரை’ படம் ஒளிப்பதிவுக்காக பரவலான பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. ‘சிவகுமாரின் சபதம்’ மற்றும் ’ரவுடி பேபி’ படங்களுக்கு படத்தொகுப்பு செய்த தீபக் இதில் எடிட்டராக பணிபுரிகிறார்.
‘மாஸ்டர்’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘லேபிள்’ வெப் சீரிஸ் ஆகியவற்றில் தனது அபார நடிப்பை வெளிப்படுத்திய மாஸ்டர் மகேந்திரன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். சர்வைவல் த்ரில்லராக உருவாகும் இப்படம், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் குறுகிய காலத்திலேயே படமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.