மக்களின் வாழ்வு இப்போது இறுக்கமாக இருக்கிறது.! -நடிகர் சந்தானம்.

பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிப்பில், கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர்கள் சந்தானம், மேகா ஆகாஷ் நடித்திருக்கும் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. இதன் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது. 

நடிகர் எம்.எஸ். பாஸ்கர், “படத்தை அற்புதமாக எடிட் செய்த எடிட்டர், கேமராமேன் என அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. ’சின்ன பாப்பா பெரிய பாப்பா’, ‘பேட்டரி’ படத்திற்குப் பிறகு இந்தப் படத்தில்தான் மாற்றுத் திறனாளியாக நடித்திருக்கிறேன். மேகா தமிழ் பேசும் நடிகை. நன்றாக வரவேண்டும். சந்தானம் எனது தம்பி. அவர் படத்தில் நான் இருக்க வேண்டும் என்று வாஞ்சையாகக் கூப்பிடுவார். கார்த்திக் யோகியும் சிறப்பான உழைப்பை கொடுத்துள்ளார். இந்த படம் வெற்றி அடைய உதவிய அனைவருக்கும் நன்றி. நூறாவது நாள் படத்தின் வெற்றி விழாவிற்கு வர வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.

நடிகர் ஜான் விஜய், ” விஜய் டிவி காலத்தில் இருந்தே நடிகர் சந்தானத்தை பார்த்து வருகிறேன். மிகவும் கடினமான உழைப்பாளி. ஜாலியாக இருப்பார். சந்தானத்தின் படங்கள் எப்போதும் போர் அடிக்காது. அது போலவே இந்த படமும் உங்களை சந்தோஷப்படுத்தியதில் மகிழ்ச்சி. ரவிமரியா, மேகா ஆகாஷ், சேஷூ என அனைவருமே செட்டில் ஜாலியாக இருந்தோம். இப்படியான ஒரு அற்புதக் குடும்பத்தை கொடுத்த இயக்குநர் கார்த்தி யோகிக்கு நன்றி. சந்தானம் சாருக்கும் உடன் வேலைப் பார்த்த எல்லோருக்கும் நன்றி”.

நடிகர் ரவிமரியா, “ஆத்தா நான் பாஸாயிட்டேன் என்ற மனநிலையில்தான் நாங்கள் உள்ளோம். குடும்பம் குடும்பமாக அனைவரும் இந்தப் படத்தை ரசிக்கின்றனர். சினிமாவில் வெற்றிப் பெறுவது எளிது கிடையாது. அதை கார்த்திக் யோகி செய்து காட்டியுள்ளார். படம் வெளியாகி ஒருவாரத்திலேயே படம் போட்ட அதன் முதலீட்டை எடுத்து விட்டது. இந்தப் படத்தின் வெற்றிக்கு சந்தானம் சார் மிகப்பெரிய ஆணிவேர்.  எல்லோருக்கும் திரையில் அதிக இடம் கொடுத்துள்ளார் சந்தானம் சார். தயாரிப்பாளரும் படத்திற்கும் பெரிய ஆதரவைக் கொடுத்துள்ளார். கூல் சுரேஷ், சேஷூ என அனைவருமே தியேட்டரை சிரிப்பால் வெடிக்க வைத்துள்ளனர். தொழில்நுட்பக் குழுவும் சிறப்பு. படத்திற்கு ஆதரவு கொடுத்து வெற்றிப் பெற வைத்த அனைவருக்கும் நன்றி”.

நடிகர் நிழல்கள் ரவி, “இந்தப் படத்தின் மூலம் எனக்கு இன்னும் பெருமைக் கொடுத்த இயக்குநர் கார்த்திக் யோகிக்கு நன்றி. கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் சினிமாவில் எனக்கு ஆதரவு கொடுத்து இருக்கிறீர்கள். கே. பாலச்சந்தர் சார் ரஜினியை பார்த்து அவரிடம் ஏதோ இருக்கிறது என்று அடுத்தடுத்து வாய்ப்பு கொடுத்து எப்படி உச்சத்தில் கொண்டு வந்தாரோ அது போலவே என்னிடம் இந்த காமெடி திறன் இருக்கிறது என்று இந்த வாய்ப்பைக் கார்த்திக் யோகி கொடுத்திருக்கிறார். கதாநாயகன், நகைச்சுவை நாயகன் என சந்தானம் கலக்கி வருகிறார். அவருடன் ஒரு படம் நடிக்க வேண்டும் என்ற ஆசை இந்தப் படம் மூலம் நிறைவேறியது. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்”.

நடிகை மேகா ஆகாஷ், “இந்தப் பயணம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். அதை உருவாக்கித் தந்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. பாட்டி இறப்பால் எனக்கு படப்பிடிப்பு சமயத்தில் கஷ்டமாக இருந்தது. ஆனால், என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். இந்தப் படத்தின் கதை கேட்கும்போது கண்டிப்பாக இது ஸ்பெஷல் படம் வெற்றி பெறும் என்பது எனக்கு தெரியும் இந்த விஷயம் கொடுத்த பார்வையாளர்களுக்கும் மீடியாவுக்கும் நன்றி”.

இயக்குநர் கார்த்திக் யோகி, “வெறும் காமெடி படமாக மட்டும் இல்லாமல் படத்தின் ரைட்டிங்கும் நன்றாக இருந்தது எனப் பலரும் பாராட்டினார்கள். அந்த ரைட்டிங்கில் தலையிடாமல் சந்தானம் 63 நாட்களும் படத்தை நம்பினார். அவருக்கு நன்றி. என் உதவி இயக்குநர்கள், தொழில்நுட்பக் குழுவினருக்கு நன்றி. ஜாக்குலின், ரவிமரியா சார், எம்.எஸ். பாஸ்கர், துணை நடிகர்கள் எல்லோருக்குமே நன்றி” என்றார்.

நடிகர் சந்தானம், “தயாரிப்பாளர் விஸ்வா சாரில் இருந்து டீ குடிக்கும் பையன் வரை எல்லோருக்கும் நன்றி. இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் போலவே அனைவரது கதாபாத்திரமும் மக்களுக்குப் பிடித்திருந்ததுதான் இந்தப் படத்தின் வெற்றி என்று நினைக்கிறேன். நாத்திகரோ ஆன்மீகவாதியோ நீங்கள் எப்படி இருந்தாலும் அந்த கண்ணோட்டத்தில் படம் பார்க்கலாம். அப்படிதான் இது அமைந்திருக்கிறது. பொதுவான ஒரு முடிவும்தான் இயக்குநர் கொடுத்திருக்கிறார். நான் ஆன்மீகவாதிதான். சோஷியல் காமெடி செய்வது கடினம். அதை இயக்குநர் அழகாக செய்திருக்கிறார். மக்களின் வாழ்வு இப்போது இறுக்கமாக இருக்கிறது. என்னையும் என்னை சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பேன். அதை பார்த்து தான் எனக்கு பல பட வாய்ப்புகளும் வந்தது. சிம்புவும் என்னை கூப்பிட்டார். இந்த இயல்பை எனக்குக் கடவுள் கொடுத்திருக்கிறார். என் படங்களுக்கு வந்தால் நீங்கள் சந்தோஷமாகப் போகலாம்” என்றார்.