சென்னை அண்ணா நகரில் உருவாகி இருக்கும் இச்சாஸ் புதிய உணவகத்தை நடிகர், இயக்குநர் பார்த்திபன் திறந்து வைத்தார். இந்த விழாவில் நக்கீரன் கோபால், ஓவியர் ஏ.பி.ஶ்ரீதர், நடிகை லலிதா குமாரி, நடிகர் விக்ரமின் தாயார் ராஜேஷ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இச்சாஸ் உணவகத்தில் நுழைந்தவுடன் ஓவிய கலைஞர் ஏ.பி. ஸ்ரீதர் கைவண்ணத்தில் உருவான ஓவியங்களை பார்த்து வியந்தனர். இந்த ஓவியங்கள் அனைத்தும் ஒரே புள்ளியில் துவங்கி முழுமை பெற்றது குறிப்பிடத்தக்கது.
நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் வர்ணம் தீட்டி குத்துவிளக்கை ஏற்றினார். அதனை தொடர்ந்து பெரிய கப்- பில் காஃபி கொண்டு வரப்பட்டு, அதில் மிகச்சிறிய அளவில் உள்ள கப்பில் இச்சாஸ் நிறுவனர் கணேஷுக்கு கொடுத்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இச்சாஸ் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உணவகத்தை திறந்து வைத்து பேசிய நடிகர், இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன், “நான் உள்ள வரும் பொது பார்த்திபனாக இருந்தேன், என்னை செல்வமணியாக மாற்றி தலை முழுக்க ரோஜாக்களாகி விட்டது. அவர் தான் ரோஜாவை தலையில் தூக்கி வைத்து ஆடுவார். உள்ளே வந்ததில் இருந்து எல்லாமே ரசனையாக உள்ளது. பொதுவாக உலகம் தோன்றிய காலத்தில் இருந்து, மக்கள் தொகை அதிகரிக்க காரணமாக இருப்பது ஃபர்ஸ்ட் நைட் தான். அந்த வகையில் ஃபர்ஸ்ட் டேவை இவ்வளவு சிறப்பாக கொண்டாடுவது இதுவே முதல்முறை என நினைக்கிறேன். விளக்கேற்றியதில் இருந்து ஸ்ரீதரின் கைவண்ணம் அழகாக தெரிகிறது.”
“இப்போ எல்லா தரப்பு மக்களும் விலையை பொருட்படுத்தாமல் ரசனையுடன் கூடிய சுவையான ஓட்டலுக்கு சென்று சாப்பிட நினைக்கின்றனர். அந்த வகையில், இந்த ஓட்டல் அதற்கு ஏற்ற ஒன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். இது மிகவும் ரசனையான ஓட்டலாக உள்ளது, இங்கு வந்து சாப்பிடனும் போல இருக்கு. கணேஷ்க்கு எனது வாழ்த்துக்கள். மேலும் பல கிளைகள் துவங்கி, வியாபாரத்தில் வெற்றி பெற வேண்டும்.”
“இவர்கள் கொடுத்த காஃபியில் வடிவமைப்பு இடம்பெற்று இருந்தது. இப்போ எல்லாம் காஃபியில் தாமரை பூ போன்ற டிசைன் செய்வது வழக்கமாக இருக்கிறது. இதற்காக நான் பா.ஜ.க.-வுக்கு விளம்பரம் பண்றேன்னு எடுத்துக்காதீங்க. மக்கள் இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களை ரசிக்கின்றனர்,” என தெரிவித்தார்.
இச்சாஸ் தரை தளத்தில் காஃபி கடை, இனிப்பகம் மற்றும் இயற்கை பொருட்கள் விற்பனையகம் அமைந்துள்ள நிலையில் முதல் தளத்தில் கான்டினென்டல் உணவுகளை பரிமாறும் உணவகம் அதற்குரிய நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தளத்தில் பாரம்பரிய உணவு வகைகளுக்கான உணவகம் இயங்குகிறது. இரண்டு தளங்களிலும் இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சி தினந்தோறும் நடைபெறும்.