ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘ரெபல்’. இப்படம் வரும் மார்ச் 22ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில், இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது.இந்நிகழ்வில் நடிகர் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் பேசியதாவது…
ரஞ்சித் சாருடன் பணியாற்றும், தங்கலான் மிரட்டலான படமாக வந்திருக்கிறது. அவருடன் அவர் தயாரிப்பில் இன்னொரு படம் செய்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. இந்தப்படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. தமிழ் பற்றிப் பேசும் கதை, இது என்னிடம் வந்தபோது சந்தோஷமாக இருந்தது, இயக்குநர் நிகேஷ் அவரது சொந்தக்காரரின் வாழ்வில் நடந்த உண்மைக்கதையை எடுத்து திரைப்படமாகச் செய்துள்ளார். மமிதா பைஜு மிக அழகாக இந்த ரோலைச் செய்துள்ளார். ஆதித்யா இந்தப்படத்தின் மையமே அவன் தான். அவனது கேரக்டர் சரியாக அமைந்ததால் தான், இந்தப்படமே சரியாக வந்துள்ளது. மிக நீண்ட வருடம் கழித்து ஸ்டூடியோ கிரீன் உடன் படம் செய்கிறேன், அவர் தான் டார்லிங்க் படத்தில் நடிகனாக என் வாழ்வை ஆரம்பித்து வைத்தார். அவருக்கு இந்த வருடம் வெற்றிகரமாக அமையும். நிகேஷ் படம் பார்த்துவிட்டு என் தயாரிப்பில் படம் செய்ய அட்வான்ஸ் தந்துள்ளேன். அத்தனை சிறப்பாகச் செய்துள்ளார். ஓஃப்ரோ மிகச்சிறப்பான பின்னணி இசை தந்துள்ளார், சித்துக்குமார் கேரளா சாங் செய்துள்ளார். அதை நான் தான் டிரெய்லரில் வைக்கச் சொன்னேன். வெங்கடேஷ் என்னிடம் எல்லாம் பேச மாட்டான் எப்போதும் பெண்களுடன் தான் பேசுவான். நல்ல நடிகன். எல்லோருமே மிக அர்ப்பணிப்போடு உழைக்கும் போது அந்தப்படம் சிறப்பாக வரும். மமிதா பைஜு அழகாக தன் கதாபாத்திரத்தைப் புரிந்து நடித்துள்ளார். ஆண்டனி அண்ணா லவ் ஸ்டோரி சொல்வார் பிரமிப்பாக இருக்கும். ஒரு குழுவாக எல்லோரும் விரும்பி உழைத்திருக்கும் படம். தமிழ் உரிமை பற்றிப் பேசும் அழுத்தமான படம் உங்கள் எல்லோருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் இவ்வாறு அவர் பேசினார்.