பிரஷாந்த் பிறந்த நாள் விழாவில், ஆயிரக்கணக்கான ‘தலைக்கவசங்கள்’ விநியோகம்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர், நடிகர் பிரஷாந்த். காதல், ஆக்ஷன், செண்டிமெண்ட் என அனைத்து ஏரியாக்களிலும் ஆல்ரவுண்டரான இவர், ‘அந்தகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தினை தொடர்ந்து, விஜய்யின் ‘கோட்’ படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது தவிர்த்து, பெயரிடப்படாத பல படங்களில் நடிக்கவிருக்கிறார். அது குறித்த பேச்சு வார்த்தை நடந்து வரும் நிலையில், பிரஷாந்த் தனது பிறந்தநாளை, ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கொண்டாடினார். இதில், ஏராளமான ரசிகர்கள் கலந்துக்கொண்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த பிறந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரஷாந்த்,
‘நான் எப்போதும் என் குடும்பமாக நினைக்கும் பத்திரிகையாளர்கள், ரசிகர்களுக்கு வணக்கம். என் பிறந்த நாளன்று என் ரசிகர் மன்ற சகோதரர்கள் பல நற்பணிகளை செய்து வரும் நிலையில், மக்களிடம் தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துவதுடன் அவர்களுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கி வருகிறார்கள்.
முதல் கட்டமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை ஆகிய பகுதிகளில் தொடங்கியவர்கள், தற்போது சென்னையில் என் பிறந்தநாளில் தொடங்கியிருக்கிறார்கள். அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும், அது நமக்கான பாதுகாப்பு.
பத்திரிகையாளர் நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் செல்கிறார்கள், அவர்களுக்கு தெரியும் தலைக்கவசம் எவ்வளவு முக்கியம் என்பது, இருந்தாலும் இதை நான் ஒரு அறிவுரையாக இல்லாமல், ஒரு தகவலாக அவர்களுக்கும் சொல்லிக்கொள்கிறேன். கோடைக்காலம் தொடங்கிவிட்டாலும் சற்று சிரமம் பார்க்காமல் தலைக்கவசம் அணியுங்கள், அது நமக்கு மட்டும் அல்ல நமது குடும்பத்திற்கு பாதுகாப்பானது. அதேபோல் நிறைய தண்ணீர் குடியுங்கள்.
பாராளுமன்ற தேர்தல் வருகிறது, அனைவரும் தவறாமல் ஓட்டு போடுங்கள், ஓட்டு மிகவும் முக்கியமானது’. என்ற அவர், மேலும் கூறியதாவது..
மிகப் பிரமாண்டமான திரைப்படமாக ‘அந்தகன்’ னை உருவாக்கியிருக்கிறோம். இப்படத்தின் வெளியீடும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, அதற்கான சரியான நேரத்திற்காக காத்திருக்கிறோம். விரைவில், ‘அந்தகன்’ மிகப்பெரிய அளவில் வெளியாகும்.
இனி வரும் சந்திப்பின்போது, அடுத்தடுத்த படங்களில் நடிப்பது குறித்த அறிவிப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.’ என்றார்.