சிவகார்த்திகேயன் ஊரில் படமான ‘நின்னு விளையாடு’. !

கே.பாக்யராஜின் உதவியாளர் சி.சௌந்தர்ராஜன். இவர் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பு குடும்பங்களில் நடக்கும் சம்பவங்களை கொண்டு “நின்னு விளையாடு” என்கிற படத்தை எழுதி இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் கதையின் நாயகனாக பிரபல டான்ஸ் மாஸ்டர் தினேஷ் நடித்திருக்கிறார். இந்தப் படத்துக்காக முப்பத்தை ஐந்து நாட்கள் கால்ஷீட் கொடுத்து… நடனம் அமைக்க இருந்த பல படங்களை தள்ளி வைத்து இந்தப் படத்தில் நடித்து கொடுத்திருக்கிறார், நடன இயக்குனர் தினேஷ். பிஸியான அதே சமயம் சம்பளம் அதிகம் வாங்கும் டான்ஸ் மாஸ்டர், இந்தப் படத்தில் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டார் என்பதை இயக்குநர் சௌந்தர்ராஜனிடம் கேட்டோம். 
“அதுக்கு கரணம் கதை சார். கதைமேல உள்ள நம்பிக்கையில் முப்பத்தை ஐந்து நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்தார். அவுட்டோரில் பத்து நாட்களுக்கு மேல் அவர் தங்கியதே இல்லையாம். முதல் முறையாக முப்பத்தி ஐந்து நாட்கள் படம் முடியும் வரை கால்ஷீட் கொடுத்து நடித்தார். மேலும் படத்தில் அவர் காளை வளர்க்கும் இளைஞராக நடிக்க இருந்ததால்,  நாங்கள் தேர்வு செய்து வைத்திருந்த களை மாட்டை குளிப்பாட்டுவது, அதற்கு தீனி போடுவது, அதனுடன் பேசுவது… பழகுவது என்று தன்னை தயார் படுத்திக்க கொண்டார். படத்துக்காக பத்து கிலோ எடை குறைத்து நடித்திருக்கிறார். 
இந்தப் படத்தில் மாடு பிடி வீராக தினேஷ் நடித்திருக்கிறாரா? 
இல்லை…காளைமாடு வளர்க்கும் இளைஞராக நடித்திருக்கிறார். மாடுன்னா அவருக்கு உசுரு. தனக்கு ஏவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அதுக்கு எந்த குறையும் இல்லாம பாத்துக்குவாரு. காரணம், தனது காளை போட்டிகளில் கலந்துக்கணும், வெற்றிபெறனும் என்கிற ஒரே சிந்தனைதான். அவர் மட்டுமில்ல… அவரது அம்மாவாக நடித்திருக்கும் தீபாவும் தன் பிள்ளைங்கள்ல ஒரு பிள்ளையாத்தான் கவனிப்பாங்க. இது காளை வளர்க்கும் எல்லோரது வீட்டிலும் நடக்கும் சம்பவங்கள்தான். உண்மை சம்பவத்தை கற்பனை கொஞ்சம் சேர்த்து படமாக்கி இருக்கேன். அவ்வளவுதான். 
தினேஷின் நடிப்பு எப்படி இருந்தது? 
அவர் ஆட்டி வைக்காத தமிழ் நடிகர்களே இல்லை என்று சொல்லலாம். இன்னைக்கு முன்னணி நடிகர்களாக இருக்கும் பல நடிகர்கள் அவரது நடனத்தில் ஆட ஆசைப்படுவாங்க. காத்திருப்பாங்க. அவர் நடனம் அமைத்து பல பாடல்கள் பெரும் புகழ் அடைந்துள்ளது அதற்கு காரணம். ‘ஒரு குப்பை கதை’ படத்தில் நடித்த போது அவரது நடிப்பை பாராட்டத்தவர்கள் இல்லை. அதனால், நடிப்பு என்பது அவருக்குள்ளேயே இயல்பாக இருக்கு. நான் எனது கதாப்பாத்திரத்துக்கு தேவையானதை அவரிடம் இருந்து எடுத்துக் கொண்டேன். அவர் ஒரு மிகச்சிறந்த நடன இயக்குனர் மட்டுமல்ல. மிகச்சிறந்த நடிகர் என்பதை படம் பார்க்கும் போது உங்களுக்கு தெரியும்… 
நடன இயக்குனர் நடிக்கும் படம் என்பதால் நடனத்துக்கு முக்கியத்துவம் இருக்குமே? 
இதுல… கதையோடு பயணிக்கும் பாடல்கள். நடனத்துக்கு என்பதைவிட… காட்சிகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம். அதை மாஸ்டரும் உணர்ந்திருந்தார். அப்படி கதையோடு பயணிக்கும் மூன்று பாடல்களுக்கு தினேஷ் மாஸ்டரும், மாரி என்கிற மாஸ்டர் ஒரு பாடலுக்கும் நடனம் அமைச்சிருக்காங்க… 
படத்தில் காதல் காட்சிகள் இருக்கிறதா? 
காதல் இருக்கு. இது கிராமத்தில் நடக்கும் கதை. அதனால், கிராமத்து பெண்களின் ஆசைகள்… கனவுகள் இதுல இருக்கும். அதே போல தன்னை விரும்பும் பெண்ணை சிறுவயதில் இருந்தே நன்கு அறிந்த நாயகன்… அவரை காதலிப்பார். என்னதான் ரெண்டு பேருமே உயிருக்கு உயிராக நேசித்தாலும் பொருளாதாரம் அவர்களை அவ்வளவு எளிதில் இணையவிடுமா? 
இந்தப் படத்தில் நாயகியாக நந்தனா ஆனந்த் என்கிற பெண்ணை தமிழில் அறிமுகப்படுத்திருக்கோம். அவுங்க மலையாளத்தில் இரண்டு படங்களில் நடிச்சிருக்காங்க… இந்தப் படத்துக்காக தமிழ் கத்துக்கிட்டு நடிச்சிருக்காங்க… நாயகியின் அப்பாவாக ‘பசங்க’ சிவகுமார் நடிச்சிருக்காரு. ‘பசங்க’ படத்துக்கு பிறகு அவருக்கு பேர் சொல்ற மாதிரி இந்தப் படத்துல அவரது கேரக்டர் அமைஞ்சிருக்கு. காதல் என்பது மகிச்சியான அனுபவம் மட்டுமல்ல. வலி… துயரம்… பங்கெடுப்பு கொண்டது. அதை இந்தப் படம் அனுபவ பூர்வமாக சொல்லும். என்னெ  சோகமாக சொல்லாமல் சுவராஸ்யமான காட்சிகள் மூலம் சொல்லி இருக்கேன். 
படத்தில் என்ன கருத்து சொல்ல வர்றீங்க? 
பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு. அந்த விளையாட்டுக்கு பின்னாடி நிறைய கஷ்டம் இருக்கு. உதாரணத்துக்கு வீட்டில் காளை மாடு வளர்க்குறாங்கன்னா… அதை  மாடா நினைக்க மாட்டாங்க. அதை குடும்பத்தில் உள்ள ஒருத்தரா நினைப்பாங்க. அப்படி தான் அவங்களுடைய ஃபீல் இருக்கும். களத்துக்கு போறதுக்கு முன்னாடி அதுக்கு எப்படி எல்லாம் பணிவிடை செய்வாங்க. வளர்ப்பாங்க. அதெல்லாம் இந்த படத்துல டீட்டெயிலா சொல்லி இருக்கேன். ஒரு மாடு ஒரு குடும்பத்திலிருந்து பிரிஞ்சா அது அவங்களுக்கு எவ்ளோ பெரிய வலியை தரும். வேதனையை கொடுக்கும். துயரமா இருக்கும். அதெல்லாம் இந்த படத்துல எளிமையா புரியும்.
படத்துக்காக காளை மாட்டை எப்படி தேர்வு செய்தீங்க? எப்படி ஒத்துழைப்பு கொடுத்தது? 
நிறைய காளை மாடுகளை பார்த்தோம். இந்த காளை எங்களை ரொம்ப கவர்ந்துச்சு. அதனால், இதை தேர்வு செய்து நடிக்க வைத்தோம். இந்த காளையும் போட்டிக்காக தயாரான காளை தான். ஒரு நடிகரா எங்களுடன் அது நடிச்சிருக்கு. களத்துல யாரையும் தொடவிடாத இந்த காளை…  பழகியதால் படபிடிப்புல எங்களோட ஒத்துழைப்பு கொடுத்தது. 
இந்த படத்தோட கிளைமாக்ஸ் காட்சி எட்டு நிமிஷம் ஒரே ஷாட்ல எடுத்திருக்கேன். அதுவும் சிங்கிள் ஷாட்டு தான். அஞ்சு… ஆறு பேர் நடிப்பாங்க. அதோட காளையும் இருந்துச்சி. நடிகர்கள் இயல்பாகவும் மனதை தொடுற மாதிரியும் வசனம் பேசி உணர்வு பூர்வமாக நடிச்சாங்க… அவுங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது போல அந்த காட்சியில் மாடும் இயல்பா இருந்து அந்த காட்சிக்கு உதவியது. 
உண்மையை சொல்லணும்ன்னா படம் தொடங்கி பத்தாவது நாள் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கினோம். அது வரை ஏதோ ஒரு படத்தில் வேலை செய்கிறோம் என்கிற எண்ணத்தில் தொழில்நுட்ப கலைஞர்கள் வேலை செய்தார்கள். கிளைமாக்ஸ் காட்சி எடுத்த போது எல்லோருமே கை தட்டி அழுது நெகிழ்ந்தாங்க. படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தவர்கள் கூட உண்மையாக நடக்கும் சம்பவத்தை நேரில் பார்ப்பது போல உணர்ந்தாங்க. அடுத்த இருபத்தி ஐந்து நாட்களுக்கு இந்தப் படத்தின் மீது பெரிய மரியாதை எல்லோருக்கும் வந்துவிட்டது. நடிப்பவர்களுக்கு கதை தெரியும். அதன் போக்கு தெரியும். ஆனால், மற்றவர்கள் கிளைமாக்ஸ் காட்சி எடுத்த பிறகே உணர்ந்தார்கள். மரியாதை கொடுத்தார்கள். 
சிவகங்கை மாவட்டத்துல சிங்கம்புனரி, கிருங்கா கோட்டை, பிரான்மலை… அதை சுத்தி உள்ள கிராமங்களில் தான் படம் எடுத்திருக்கோம்.  செழியன் உதவியாளர் பிச்சுமணி என்பவர்தான் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அவ்வளவு அழகா படம் அமைந்ததற்கு அவரது ஒளிப்பதிவும் ஒரு காரணமாக இருக்கும். 
சிங்கம்புனரி என்றால் சிவகார்த்திகேயன் ஊரா? 
ஆமாம். அவர் புதிதாக கட்டி இருக்கும் வீடு எதிரில் கூட காட்சிகளை படமாக்கி இருக்கோம். இதுல சிவகார்த்திகேயன் அண்ணனும் நடிச்சிருக்கார். அதாவது சிவகார்த்திகேயனின் பெரியம்மா மகன். படத்துக்கு என்ன தேவையோ அதை உணர்ந்து கொண்டு தயாரிப்பாளர் கார்த்திக் செலவு செய்து தயாரித்திருக்கிறார். அது படத்துல நன்றாக தெரியும். நான் பாக்யராஜ் சாரிடம் தொழில் கற்றவன் என்பதால் திரைக்கதையில் அவரிடம் கற்ற அனுபவத்தை இதில் பயன்படுத்தி இருக்கேன். அது படத்தில் தெரியும். விரைவில் படத்தை திரையரங்கில் பார்க்கலாம்”