அண்மையில் பரபரப்பு கூட்டிய புண்ணியமூர்த்தி பாலகிருஷ்ணா . அமரர் என் . டி. ராமாராவின் சீமந்த புத்திரன். திரைப்படத்தின் முன்னோட்டவிழாவுக்கு வந்திருந்த நடிகையர் இருவரில் ஒருவரை பப்ளிக் முன்பாகவே “தள்ளி நில்” எனச் சொல்லி தள்ளிவிட்டவர். வீடியோ இருக்கிறது.. அந்த பாவப்பட்ட நடிகை அஞ்சலி.
பல தடைகள் தாண்டி திரை உலகுக்கு வந்திருப்பவர்.
கேமராக்கள் சூழ்ந்த பொது நிகழ்ச்சியில் இப்படியொரு அவமானத்தை சந்தித்து விட்டோமே என மனதுக்குள் விம்மி அழுதாலும் ,அதை வெளிக்காட்ட முடியுமா? இன்னொரு வனவாசத்தை சந்திக்க அவர் தயாரில்லை. பணம் கொட்டும் சினிமாவில் கண்ணகியாக வாழ்வதில் அர்த்தம் இல்லை. அனர்த்தமாகிவிடும் . ஆண் ஆதிக்கத்தின் ஆணி வேர்,கீழ் லோகத்தின அதல ,விதல, சுதல, தலாதல, மகாதல ,ரசாதல ,பாதாளம் என ஏழு லோகத்திலும் பாயந்திருக்கிறது என்று சனாதன தர்மம் நம்புகிறது. அந்த ஆதிக்கத்தை பெண் ஒருவரால் எதிர்க்க முடியுமா?
அஞ்சலிக்கு வந்த மேலிடத்து அழுத்தம் அவரை “தவறாக எதுவும் நடந்து விடவில்லை “என செய்தி பதிய வைத்து விட்டது.
என். டி. ஆர் பாலகிருஷ்ணாவை திரை உலகம் எப்படி பார்க்கிறது.?
சக நடிகர்கள் அவரை மதிப்பதில்லை. அதை வெளிக்காட்டுவதும் இல்லை.
மாமனிதன் பாலகிருஷ்ணா 2016 -ல் நடந்த ‘சாவித்திரி’ பட ஆடியோ விழாவில் பெண்களை இழிவு படுத்தி பேசிவிட்டார்.
“பெண்களை டீஸ் பண்ற மாதிரி நடிச்சா என் ரசிகர்களுக்கு பிடிக்காது. நடிகைக்கு கிஸ் கொடுக்கணும்,இல்ல கர்ப்பம் ஆக்குற மாதிரி நடிக்கணும். கொண்டாடுவாங்க.”
போலீசில் புகார் செய்யப்பட்டது. உடனே தெலுங்கு தேசம் கட்சி வரிந்து கட்டி வக்காலத்து வாங்கியது. “பாலய்யா காமடியாக பேசினார். அவருக்கு பெண்களை இழிவு படுத்துகிற எண்ணமெல்லாம் இல்லை. ” என மழுப்பியது.
இவர் எப்படிப்பட்ட ஆள் என்பதற்கு மடிப்பு அம்சா விசித்ரா பிக்பாஸ்நிகழ்ச்சியில் குமுறியபடி கலங்கியது நல்ல எடுத்துக்காட்டு.
இன்னொரு சம்பவம்.
ராதிகா ஆப்தே பாலிவுட் நடிகை. பாலய்யாவுடன் இணைந்து நடித்த முதல் படம்.
“அவரை அதற்கு முன்னர் பார்த்ததில்லை. செட்டில்தான் முதலாவதாக பார்த்தேன். நான் உடல் நலமின்றி படுத்திருப்பதுபோல சீன் எடுத்தார்கள். அவர்தான் அருகில் இருந்தார். என்னுடைய பாதங்களை வருடத் தொடங்கி விட்டார். அது மாதிரியான சீன் இல்லை. ஒரு பெண்ணை எந்த நோக்கத்தில் அப்படி சுரண்டுகிறார்கள் என்பதை விளக்கத் தேவையில்லை. பளார் என அறை . அத்தனை பேர் முன்பாக அறைந்தேன் . ஆடிப்போய் விட்டார். அதன் பிறகு என்னிடம் தவறாக நடக்கவில்லை” என்கிறார் ராதிகா ஆப்தே. நம்ம சூப்பர் ஸ்டாருடன் நடித்திருப்பவர்.
மற்றொரு சம்பவம்.
பெல்லம் கொண்டா சுரேஷ்,சூர்யா நாராயணா சவுத்ரி இவர்கள் இருவரும் தயாரிப்பாளர்கள். இவர்களை கைத்துப்பாக்கியினால் ( ரிவால்வார்.) சுட்டுவிட்டு உடனே மருத்துவமனைக்கு போய் அட்மிட் ஆகிவிட்டார். ! எப்படி?
“என்னை சூரிக் கத்தியால் குத்த வந்தார்கள் . தற்காப்புக்காக சுட்டேன் “என்று கதை விட்டார். இவரது மனைவியின் பெயரில் அந்த ரிவால்வார் லைசன்ஸ் இருந்தது.
தயாரிப்பாளர்களுக்கு பல இடங்களிலும் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதால் அவர்கள் பெரிய அளவில் பல்டி அடிக்க வேண்டியதாகிவிட்டது .
“துப்பாக்கி சத்தம் கேட்டதும் பயத்தில் நினைவுகள் இல்லாமல் போய் விட்டது.!”
இது போதாதா ?