உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை தொடர்ந்து வரும் ஜூலை மாதம் அவரது இந்தியன் 2 வெளியாக உள்ளது. .
ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 அதை தொடர்ந்து இந்தியன்3 என இரு பாகங்களாக வெளியாகவுள்ளது.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்து வருகிறது.
இதில் விஜய்யின் மனைவி சங்கீதா, பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தாலா உள்ளிட்டவர்களும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர்.
மேலும் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர், காஜல் அகர்வால் ஆகிய படக்குழுவினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசனுக்கு உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இப்படம் குறித்து இயக்குனர் ஷங்கர் கூறுகையில், கமல்ஹாசன் நடித்துள்ள ஒவ்வொரு காட்சியும் தெறிக்கும் என்றும், மீண்டும் திரும்பவரும் இந்தியன் தாத்தா இன்றைய பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் கதைக்களம் என்றும் , இந்தப் படத்தை லைகா நிறுவனம் மிக பிரம்மாண்டமான அளவில் தயாரித்துள்ளதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
முன்னதாக இப்படம் குறித்து இயக்குனர் ஷங்கர் கூறுகையில், “முதன்முறையாக அனிருத்துடன் இணைந்து பணியாற்றுகிறேன். இப்படத்தில் 6 பாடல்கள் உள்ளன. அனைத்து பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. இன்றைய காலக்கட்டத்தில் இந்தியன் தாத்தா வந்தால் எப்படி இருக்கும் என்பது தான் படம்” என தெரிவித்தார்.
இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான முதல் நாளிலிருந்து படத்துக்காக காத்திருக்கிறேன். எப்போதெல்லாம் கமல், ஷங்கர், அனிருத்தை பார்க்கிறேனோ அப்போதெல்லாம் படம் குறித்து அறிவிப்பை கேட்பேன் விக்ரம்’ படத்தின் ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது கூட கமல், ‘இந்தியன்’ தாத்தா கெட்டப்பில் தான் இருந்தார். அவரின் அந்த முழு ஒப்பனைக்கு எவ்வளவு நேரம் எடுத்திருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது” என்றார். இந்நிகழ்வில் கமல்ஹாசன், ஷங்கர், அனிருத், அதிதி ஷங்கர், வசந்த பாலன், தம்பி ராமையா, லோகேஷ்கனகராஜ், நெல்சன், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பா.விஜய் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர்.