‘லாரா”  படத்தலைப்பை  வெளியிட்ட சத்யராஜ் !

காவல்துறைக்குச் சவாலாக அமைந்த வழக்கு ஒன்றை  மையமாக வைத்து இன்வெஸ்டிகேஷன் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள புதிய படம், ‘லாரா’   இப்படத்தில்,’முருகா’   அசோக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார்.இவருக்கு ஜோடியாக அனுஸ்ரீ, வெண்மதி, வர்ஷினி என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் மேத்யூ வர்கீஸ் , கார்த்திகேசன், எஸ்.கே. பாபு ஆகியோர் நடித்திருக்கின்றனர். இப்படத்தை எம். கே ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் எம்..கார்த்திகேசன் தயாரித்துள்ளார். 

இப்படத்தை எழுதி இயக்கியுள்ள அறிமுக இயக்குநர் மணி மூர்த்தி கூறியதாவது,””90களில் நான் படித்துக் கொண்டிருக்கும் போது  எங்கள் பகுதியில் ஒரு சம்பவம் நடந்தது. அதாவது காரைக்காலுக்கும் அக்கரை வட்டம் என்ற பகுதிக்கும் இடையில் ஒரு குறுக்குப் பாலம் உண்டு. அதில் போக்குவரத்து குறைவாக இருக்கும்.தனியே செல்வதற்கு அச்சமூட்டும்.சுற்றுப்புறம் எல்லாம் விவசாய நிலங்கள்.அந்த மரப்பாலத்தினருகே ஒரு பெண் சடலம் கிடந்தது.  அடையாளம் தெரியாது சேதமடைந்த நிலையில் அந்தப் பெண் சடலம் கிடந்தது. அது பற்றி போலீஸ் எவ்வளவோ விசாரித்த போதும் சரியாகத் துப்பு கிடைக்காமல் அவர்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது.

ஆனால் மக்கள் அது இன்னார் என்றும் இன்னாரது மனைவி என்றும் ஆளாளுக்கு ஒரு கதை சொன்னார்கள்.ஆனால் எதையும் நிரூபிக்க முடியவில்லை. நான் அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டேன். மக்கள் தாங்களாகவே எப்படி இப்படிப் புனைகதைகள் சொல்கிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சிலர் சொன்ன கதைகள் வியப்பாகவும் , யாரும் யோசிக்காத விதத்தில் சுவாரஸ்யமாகவும் இருந்தன. நாங்கள் திரைப்படம் எடுப்பது என்று பேசியபோது  வேறொரு கதையைத்தான் படமாக்க நினைத்தோம்.

ஆனால் அந்தச் சம்பவம் ஏனோ எனக்கு அப்போது நினைவுக்கு வந்தது. மனதில் பொறி தட்டி வெளிச்சம் கிடைத்தது போல் இருந்தது.  உடனே அது பற்றி நாங்கள் யோசித்தோம். அதை விரிவாக்கி திரைப்படமாக எடுப்பதாக முடிவு செய்தோம். அதுதான் இந்த ‘லாரா ‘  திரைப்படம்.திட்டமிட்டபடி படத்தையும் எடுத்து முடித்து விட்டோம்.இப்படத்தின் டைட்டில் லுக்கை,  என் பிறந்த நாளில் நடிகர் சத்யராஜ் வெளியிட்டது,  எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சி “.என்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை ஆர்.ஜே.ரவீன் கவனிக்க,  ரகு சரவண் குமார் இசையமைத்துள்ளார்.